×

மத்திய நீர்வள ஆணையரே காவிரி மேலாண்மை ஆணையர்: மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய நீர்வள ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.சின்ஹா, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும் தலைவராக செயல்படுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. அதில், ஆணையத்தின் தலைவராக மசூத் உசேன், காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவராக நவீன்குமாரும் நியமிக்கப்பட்டனர். இதில் ஒவ்வொன்றிலும் தமிழகம் உள்பட 4 மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து ஆணையம், ஒழுங்காற்று குழுவின் கூட்டம் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் இருந்த மசூத் உசேனின் பதவிக் காலம் கடந்த 30ம் தேதியுடன் முடிவடைந்தது.

இதையடுத்து மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய ஆணையராக ஏ.கே.சின்ஹா நியமிக்கப்பட்டார். இதனால் காவிரி ஆணையத்தின் தலைவராகவும் இவரே செயல்படுவாரா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான நியமன குழு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக ஏ.கே.சின்ஹாவை நியமனம் செய்ததற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் முந்தைய நிலையை போன்றே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராகவும் ஏ.கே.சின்ஹா செயல்படுவார்’ என கூறப்பட்டுள்ளது.


Tags : Central Water Authority, Cauvery Management Commissioner, Central Government
× RELATED வரலாற்றிலேயே முதன்முறையாக உள்ளங்கை...