சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் 3 மடங்குக்கும் கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம்: மதுரையில் முதல்வர் விளக்கம்

அவனியாபுரம்: சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 3 மடங்குக்கும் கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.தூத்துக்குடி செல்லும் வழியில் நேற்றிரவு மதுரை வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானநிலையத்தில் அளித்த பேட்டி: ஆணவ படுகொலைகள் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் எட்டு வழிச்சாலை பணிகள் எதுவும் நடக்கவில்லை. இது மத்திய அரசின் திட்டம். மாநில அரசின் திட்டம் அல்ல. இந்த விரைவுச் சாலை கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம், அதற்குப் பிறகு கேரளா கொச்சி வரை செல்கிறது. சேலத்திற்காக இந்த சாலை அமைக்கப்படவில்லை.
சேலத்தில் இருந்து சென்னை வரை 70 கிலோ மீட்டர் தூரம் மிச்சப்படுகிறது. இதனால் எரிபொருள், நேரம் மிச்சமாகும். அதிக வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகளை அமைத்து கொடுப்பது அரசின் கடமை. மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வந்தது. புதிய தொழில்கள் வருவதற்கும் வாய்ப்பாக உள்ளது. உட்கட்டமைப்பு சிறப்பாக அமைந்திருந்தால்தான் வெளிநாட்டில், வெளிமாநிலங்களில் இருந்து அதிகமாக தொழில் முதலீடு செய்ய வருவார்கள்.

கடந்த காலத்தில் இழப்பீடு தொகை குறைவாக இருந்தது இப்போது புதிய இழப்பீடு சட்டத்தின் வாயிலாக கிட்டத்தட்ட மூன்று மடங்கிற்கு கூடுதலாக இழப்பீடு கொடுக்கிறோம். 15 ஆண்டுகளான ஒரு தென்னை மரத்திற்கு ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.  ஒரு ஏக்கருக்கு 70 மரங்கள் என்றால் ரூ.38 லட்சம் ரூபாய் கிடைக்கிறது. அதுபோக இடத்திற்கு பணம் தரப்படுகிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, எந்த ஒரு அணையும் கட்டக்கூடாது. எனவே ஒகேனக்கல் அருகே கர்நாடக மாநிலத்தால் அணை கட்ட இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.

× RELATED ஏற்கனவே உள்ள சாலையை விரிவாக்கம்...