மேட்டூர் அணை பகுதியில் யானை கூட்டம் முகாம்: சோளப்பயிரை நாசமாக்கியதால் விவசாயிகள் விரட்டினர்

மேட்டூர்: தண்ணீர் தேடி வந்த இடத்தில் உணவும் கிடைத்ததா, மேட்டூர் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இதனால், கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். கடும் வறட்சியின் காரணமாக, தமிழக-கர்நாடக எல்லை வனப்பகுதியில் நீர்நிலைகள் வறண்டன.  இதையடுத்து, வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் படையெடுப்பது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை பாலாறு வனப்பகுதியில் இருந்து 3 குட்டிகள், 2 ஆண் யானைகள் உட்பட 14 யானைகள் வெளியேறின. இந்த யானைகள் சுமார் 25 கி.மீ., தொலைவிற்கு பாலாறு மற்றும் காவிரி கரையை கடந்து செட்டிப்பட்டி வந்தடைந்தன. பின்னர் ஏமனூர், கோட்டையூர் வழியாக, காவிரி கரையில் உள்ள கிராமங்களைத் தாண்டி பண்ணவாடி பரிசல்துறை பகுதியை அடைந்தன.

அப்போது, காவிரி ஆற்றில் பயிர் சாகுபடி செய்யப்பட்டிருப்பதை கண்ட யானைகள், தாகத்திற்கு தண்ணீர் தேடி வந்த இடத்தில், உணவும் கிடைத்ததால கொண்டாட்டமடைந்தன. சோளப்பயிரை நாசமாக்கின. யானை கூட்டத்தைக்கண்டு அப்பகுதியில் உழவுப்பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளும், வயல்களுக்கு வந்தவர்களும்  ஓட்டம் பிடித்தனர். தகவல் தந்தும் வனத்துறையினர் வராததால், கிராம மக்களே ஒன்றிணைந்து பட்டாசு வெடித்தும், டமாரம் அடித்தும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சில யானைகள் காவிரியை கடந்து தர்மபுரி மாவட்ட வன எல்லைக்கு சென்றன. ஆனால், சில யானைகள் அங்கேயே சுற்றித்திரிந்தன. குடியிருப்புக்கு மிக அருகிலேயே, யானை கூட்டம் முகாமிட்டிருப்பதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். எனவே, யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில், வனப்பகுதியையொட்டி தொட்டி கட்டி அதில் தண்ணீரை நிரப்பி வைக்க, வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Elephant,herd camp , Mettur Dam, Farmers evicted , corn
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு