சமூக ஆர்வலர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு முன்னாள் எம்பி சோலங்கிக்கு ஆயுள்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: சமூக ஆர்வலர் அமித் ஜேத்வா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் பாஜ முன்னாள் எம்பி டினு சோலங்கி உட்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம், ஜூனாகத் மக்களவை தொகுதி முன்னாள் எம்பி டினு சோலங்கி. பாஜ.வை சேர்ந்த இவர், ஜூனாகத் பகுதியில் உள்ள கிர் சிங்கங்கள் சரணாலயத்தில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுக்கும் தொழில் செய்து வந்தார். இது பற்றிய ரகசியத்தை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் சமூக ஆர்வலர் அமித் ஜேத்வா வெளிப்படுத்தினார். இந்நிலையில், 2010ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அமித் ஜேத்வா நீதிமன்றத்துக்கு வெளியே மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

 இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், டினு சோலங்கி உள்பட 7 பேர் மீது குற்றம்சாட்டியிருந்தது. கடந்த 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், சோலங்கி உள்பட 7 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தாவே தீர்ப்பளித்தார். தண்டனை விவரம் 11ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதன்படி, நீதிபதி தாவே நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தார். இதில், சோலங்கி உள்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Related Stories: