சாலை விபத்துகளை தடுக்க14,000 கோடியில் திட்டம்: மக்களவையில் கட்கரி தகவல்

புதுடெல்லி: ‘நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, ரூ.14 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது,’ என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று நடந்த கேள்வி நேரத்தின்போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதை  தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விபத்து நிகழும் இடங்கள், இடைவெளிகளை கண்டறிந்து, அதனை சரி செய்வதற்காக ரூ.14 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு மத்திய நிதி அமைச்சகம் கொள்கை ரீதியிலான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த திட்டத்தை அமல்படுத்த, உலக வங்கியின் உதவியை அரசு கேட்டுள்ளது.  நமது அரசுக்கு இது மிகவும் முக்கியமான திட்டமாகும். அதிக முயற்சிகள் எடுத்த போதிலும் சாலை விபத்துகளை குறைப்பதில் போதுமான வெற்றி கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.தேசிய குற்றத்தடுப்பு ஆணையத்தின் தகவல்படி, நாட்டில் கடந்த 2016ம் ஆண்டில் 4 லட்சத்து 80 ஆயிரத்து 652 விபத்துக்கள் நடந்துள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 785 பேர் இறந்துள்ளனர். 4 லட்சத்து 94 ஆயிரத்து 624 பேர் காயமடைந்து உள்ளனர்.

விபத்துகளை குறைத்த தமிழகத்துக்கு பாராட்டு
அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டில் விபத்து எண்ணிக்கையை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. மற்ற மாநிலங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாராட்டும்படியாக இல்லை. தமிழக அரசின் முயற்சியால் விபத்துகளின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது. நாட்டின் பிற பகுதிகளில் 1.5 சதவீதம் மட்டுமே விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது,’’ என்றார்.

× RELATED வேலூர் மக்களவை தேர்தலையொட்டி பணம்,...