எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறது பாஜ : மாயாவதி கண்டனம்

லக்னோ: ‘பண பலம், அதிகார பலத்தை வைத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க பாஜ முயற்சிக்கிறது,’ என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரசின் 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் பாஜவில் இணைந்துள்ளனர். இதனால், அங்கு மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது. இது குறித்து, பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பண பலத்தை தவறாக பயன்படுத்தியும், மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்தும் பாஜ மீண்டும் ஆட்சியை பிடித்தது.

இப்போது, சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த மாநிலங்களில், எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருகிறது. கர்நாடகாவிலும், கோவாவிலும் பண பலத்தையும், அதிகார பலத்தையும் காட்டி எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை வளைக்கும் பாஜவின் செயலால் ஜனநாயகத்தின் மீது கறை படிந்துள்ளது. எனவே, கட்சி தாவுபவர்களின் எம்எல்ஏ பதவியை பறிக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

Related Stories: