ஜனநாயகம் தினம் தினம் அடி வாங்குகிறது கர்நாடகா, கோவா விவகாரம் பொருளாதாரத்தை பாதிக்கும்: மாநிலங்களவையில் ப.சிதம்பரம் பேச்சு

புதுடெல்லி: ‘‘ஜனநாயம் தினம் தினம் அடி வாங்கிக் கொண்டிருக்கிறது. கர்நாடகா, கோவாவில் நடக்கும் விவகாரங்கள் பொருளாதாரத்திலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும்,’’ என மாநிலங்களவையில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்தார்.

கர்நாடகாவில் நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் எம்பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலங்களவை நேற்று கூடியதும், பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. அப்போது குறுக்கிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, ‘‘பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், எம்எல்ஏ.க்களை அக்கட்சி விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இது, ஜனநாயகம் மீதான பெரும் தாக்குதல்,’’ என்றார்.இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘‘காங்கிரசுக்கு தலைவர் இல்லாவிட்டால் அதற்கு பாஜ எப்படி பொறுப்பாக முடியும்?’’ என்றார். இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் எம்பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், சிறிது நேரத்தில் அவர்கள் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அப்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பேசியதாவது:மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்த கணக்கீடு, பொருளாதார ஆய்வறிக்கையிலும், பட்ஜெட் ஆவணத்திலும் வெவ்வேறாக உள்ளது. பட்ஜெட்டில் வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாகவும், பொருளாதார ஆய்வறிக்கையில் 7 சதவீதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, வளர்ச்சி விகிதம் குறித்த ஒருங்கிணைந்த கணிப்பு அரசிடமே இல்லை.
Advertising
Advertising

பட்ஜெட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்த கட்டமைப்பு மறுசீர்த்திருத்தங்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது. அவை எந்த மாதிரியான மறுசீர்த்திருத்தங்கள் என விளக்கப்படவில்லை. மாற்றம் செய்வதெல்லாம் மறுசீர்த்திருத்தமாகி விடாது. இன்று நாம் கர்நாடகாவிலும், கோவாவிலும் நடப்பதை பார்க்கும் போது, அரசியல் அடக்குமுறையாக தோன்றலாம். ஆனால், அது பொருளாதாரத்தையும், அந்நிய முதலீடுகளையும், தர ஏஜென்சிகளையும் கடுமையாக பாதிக்கக் கூடிய விளைவுகளாகத்தான் எனக்கு தோன்றுகிறது.கடந்த 2 நாட்களாக ஜனநாயகம் மிக அதிகமாக சேதப்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் ஜனநாயக கட்டமைப்பையே சிதைக்கிறது. இங்கு தினம் தினம் ஜனநாயகம் அடி வாங்குவதை பார்க்கும்போது மிக வேதனையாக இருக்கிறது. கர்நாடகா, கோவாவில் நடக்கும் நிகழ்வுகள், பாஜ.வுக்கு அரசியல் இலக்கை எட்ட உதவலாம். அதே நேரம், அவை நம் நாட்டின் பொருளாதார இலக்கை எட்ட முடியாமல் ஆக்கி விடக் கூடியது. இது, வெறும் அரசியல் விவகாரம் என்பதற்காக மட்டும் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆட்சியின் நிலைத்தன்மை இன்மையால் முதலீடு நிறுவனங்கள் நம்மை புறக்கணித்து விடும் என்பதற்காகவும்தான் கண்டனம் தெரிவிக்கிறோம்.சர்வதேச நிறுவனங்கள், இங்குள்ள ‘அடிப் பணிந்த’ இந்திய டிவி சேனல்களை பார்ப்பதில்லை. அவர்கள், ஜனநாயகத்திற்கு மதிப்பு கொடுக்குமாறு பாஜ.விடம் கேட்டுக் கொள்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.

கிரிக்கெட்டில்மட்டுமல்ல...

ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘சந்தோஷமான சூழலில் பேசவே நான் விரும்புகிறேன். நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் அணி தோற்றதற்காக மட்டும் வருத்தப்படவில்லை, தினந்தோறும் ஜனநாயகம் அடி வாங்குவதைப் பார்த்தும்தான்...’ என்று கூறியுள்ளார்.

நிர்மலாவுக்கு பாராட்டு

‘பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி, பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ப.சிதம்பரம் தனது பேச்சின்போது பாராட்டு தெரிவித்துக் கொண்டார்.

Related Stories: