ஒரே நாளில் சவரன் 480 அதிகரிப்பு தங்கம் விலை சவரன் 26,640ஐ தொட்டது

சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக நேற்று ஒரு சவரன் தங்கம் 26,640க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் சவரன் 480 அதிகரித்தது. கடந்த மாதம் இறுதியில் ஆபரண தங்கம் சவரன் 26,000ஐ தாண்டியது. பின்னர் சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப திடீர் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன. கடந்த 5ம் தேதி சர்வதேச சந்தையில் விலை குறைந்தபோதும், மத்திய அரசு பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 12.5 சதவீதமாக உயர்த்தியதால், அன்றைய தினம் சவரனுக்கு 512 அதிகரித்து ஒரு சவரன் ரூ.26,552க்கு விற்கப்பட்டது.

  இந்த நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு 60 அதிகரித்து 3,330க்கும், சவரனுக்கு 480 அதிகரித்து 26,640க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை கடந்த மாதம் 25ம் தேதி ஒரு சவரன் ரூ.26,424க்கு விற்கப்பட்டது. இதுவே தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சமாக இருந்து வந்தது. இந்த சாதனையை நேற்றைய விலை முறியடித்துள்ளது.  இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது: கடந்த 2 நாட்களாக அமெரிக்காவில் பெடரல் கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் வைப்பு நிதிக்கான வட்டியை உயர்த்துவது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீட்டை அதிகரித்துள்ளனர். இதனால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. வரும் வாரங்களில் ஒரு சவரன் தங்கம் 27,000 தொட வாய்ப்புள்ளது என்றார்.

Related Stories: