×

தமது பொதுவாழ்வில் வினோதமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது: அதிருப்தி எம்.எல்.ஏக்களை சந்தித்தப்பின் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டி

பெங்களூரு: 10 எம்எல்ஏக்களில் 8 பேர் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதம் அளித்தனர் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் பேட்டியளித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மஜத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து  வருகிறது. கூட்டணி மீது அதிருப்தி காரணமாக மஜத - காங்கிரசை சேர்ந்த 14 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தனர். இவர்கள் அனைவரும் மும்பை சென்று ஒரு தனியார் ஓட்டலில் தங்கியுள்ளனர்.  எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது நேற்று முன்தினம் பரிசீலனை நடத்திய சபாநாயகர் ரமேஷ்குமார், 5 பேரின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டு விளக்கம் அளிக்க நேரில் வருமாறு கடிதம் அனுப்பினார். அதே சமயம் 9 பேரின்  ராஜினாமா கடிதத்தை நிராகரித்தார். அவர்கள் அனைவரும் நேரில் வந்து மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையேற்ற 8 எம்எல்ஏக்கள் மும்பையில் இருந்தபடியே ஸ்பீட் போஸ்ட்டில் தங்கள் ராஜினாமா  கடிதத்தை மீண்டும் அனுப்பியுள்ளனர்.

மேலும், தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமார் ஏற்றுக்கொள்ளாத நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சார்பில் சபாநாயகருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை இன்று விசாரித்த  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, அனிருத்தா போஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெங்களூரு செல்லும் எம்எல்ஏக்களுக்கு உரிய பாதுாப்பு வழங்க வேண்டும் எனவும் கர்நாடகா டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும், எம்எல்ஏக்கள் ராஜினாமா தொடர்பாக இன்றைக்குள் கர்நாடக சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக நாளை காலை உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  தொடர்ச்சியாக, எம்எல்ஏ-க்களின் ராஜினாமா பற்றி முடிவெடுக்க தனக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்த முடியாது என்றும், இந்த வழக்கை இன்றே விசாரணைக்கு ஏற்று கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து சபாநாயகர்  முறையீடு செய்துள்ளார். இன்றே விசாரணைக்கு ஏற்க மறுத்த நீதிமன்றம் இந்த மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து 10 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளித்தனர். மும்பையிலிருந்து பெங்களூரு திரும்பிய அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பெங்களூரு விதான் சவுதாவில்  சபாநாயகரை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தனர். கர்நாடகாவில் 16 எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் நேரில் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதால் குமாரசாமி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சந்தித்து  பேசிய பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார், தமது பொதுவாழ்வில் வினோதமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சபாநாயகர் என்ற முறையில் தனக்கென ஒரு கடமை உள்ளதாக ரமேஷ்குமார்  பேட்டியளித்தார். தற்போதைய சூழலில் யாரையும் பாதுகாப்பதோ நீக்குவதோ தமது வேலையல்ல என்றும் தன்னை பற்றி நாளிதழ்களில் வந்த செய்திகள் வருத்தம் அளிக்கின்றன என்றும் ரமேஷ்குமார் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன். இந்த ராஜினாமா, அரசியல் சூழ்ச்சியா? அல்லது  தானாக எடுத்த முடிவா? என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்ய மாட்டேன் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன். ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன். ஆனால் அதையெல்லாம்  ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். கர்நாடக எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டேன். எம்.எல்.ஏக்கள் ஒரு சபாநாயகரை சந்திக்க உச்சநீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டுமா? மக்களுக்கு  மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன். என்னை அணுகி இருந்தால் முறையான பாதுகாப்பு வழங்கி இருப்பேன் என அவர்களிடம் தெரிவித்தேன். சிலரின் மிரட்டல் காரணமாக மும்பை சென்றதாக 10 எம்.எல்.ஏக்களும் கூறினர்.  எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து பெங்களூரு விதான் சவுதாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Tags : Karnataka Speaker Rameshkumar Interview With Dissatisfied MLAs
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...