இந்தியாவிலேயே முதன்முறையாக நியூட்ரினோ ஆய்வகம்: தேனியில் அமைப்பதற்கு மத்திய அணுசக்தித்துறை ஒப்புதல்

தேனி: தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தித்துறை ஒப்புதல் அளித்துள்ளது. முன்னதாக, தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரத்தில் உள்ள அம்பரப்பர் மலைப் பகுதியில்  நியூட்ரினோ ஆய்வுத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2010-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள், தேனி பகுதியை சேர்ந்தவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  எனப்பலரும் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் பொட்டிப்புரம் பகுதியில் இந்த அறிவியல் ஆய்வு மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தப் பகுதியைச் சேர்ந்த டி.புதுக்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பொட்டிபுரம், சின்ன பொட்டிபுரம், திம்மிநாயக்கன் பட்டி,  குப்பனாசாரிபட்டி, தெற்குப்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள் தேனி மாவட்ட வருவாய் அதிகாரியிடம், இந்த ஆய்வு மையம் அமைந்தால், எங்கள் ஊர்களை காலி செய்து விட்டு வெளியேறும் நிலை ஏற்படும். குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும்.  இந்த மையத்தை எங்கள் பகுதியில் அமைக்க கூடாது என மனு அளித்துள்ளனர்.

நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தை, கடினமான மலைப் பாறைகளின் கீழே தான் அமைக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள மலைகளைப் போல, இந்தியாவில் எங்கும் இல்லை. இதன் மூலம், அறிவியல் வளர்ச்சியில் தமிழ்நாடு, தனி புகழ் பெறும்  வாய்ப்பு கிடைத்துள்ளது. நமது இளம் விஞ்ஞானிகளையும், ஆராய்ச்சி மாணவர்களையும், பொறியாளர்களையும் உலகத் தரம் வாய்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுத்த முடியும். இந்த வாய்ப்பை தமிழகம், இழந்து விடக் கூடாது. இந்த ஆய்வுக்  கூடத்தில், எவ்வித ஆபத்தான கதிர் வீச்சு பொருட்களும் பயன்படுத்தப்படாது. அணுகுண்டு ஆராய்ச்சிக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சுற்றுப்புறத்தையோ, நீர், நில வளத்தையோ இந்த ஆராய்ச்சி எவ்விதத்திலும் பாதிக்காது. மற்ற தொலைநோக்கு கருவிகளைப் போன்றது. தமிழகத்தில் இது அமைவதால், மாணவர்களும் ஆசிரியர்களும் அங்கு சென்று ஆராய்ச்சிகளை பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைப்பதற்கு மத்திய அணுசக்தி துறை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்தியாவிலேயே முதன்முறையாக தேனியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்படுகிறது.  இதனிடையே நியூட்ரினோ ஆய்வகத்தால் சுற்றுப்புற சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, 2 கி.மீ. தொலைவுக்கு மலையை குடைந்து நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அப்துல்கலாம் கருத்து:

இந்த நியூட்ரினோ திட்டம் குறித்து முன்னாள் குடியரசுத்தலைவரும் விஞ்ஞானியுமான அப்துல்கலாம் நியூட்ரினோ திட்டம் நியூட்ரினோவின் எடை வரிசையை அறிவியல் முறையில் ஆராய்ந்து கண்டு பிடிக்கும். தேனி பகுதியிலும், அதன் சுற்று  வட்டாரங்களிலும் உள்ள, அறிவியல் நிலையங்களும், கல்லூரிகளும் இந்த நியூட்ரினோ திட்டத்தால், மேலும் வலுப்படுத்தப்படும். நான் அறிவியலாருடன் கலந்து ஆலோசித்த போது, தோண்டி எடுக்கப்படும் கற்கள், நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம்  மற்றும் சாலைகள் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் என்று கூறினர். பொதுமக்களும் இதனால் பயனடைவர். ஐரோப்பாவில் உள்ள செர்ன் ஆராய்ச்சி நிலையம், அதன் பெரிய ஹாட்ரான் கொல்லைடர் திட்டத்தால் புகழடைந்தது போன்று,  தேனியும் அதன் சுற்றுவட்டாரமும், நியூட்ரினோ அறிவியல் திட்டத்தால் புகழடையும். திட்டத்தில் உள்ளவர்கள், இந்த வட்டாரத்தின் சுற்றுப்புறச் சூழலின் முழுத்தேவைகளை கவனத்தில் கொண்டு செயல்படுத்துவர் என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : India, Neutrino Laboratory, Theni, Central Atomic Energy Department, Approved
× RELATED நியூட்ரினோ திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளாவுடன் மத்திய அரசு ஆலோசனை