14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சென்னை: பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. மறுசுழற்சி  செய்யமுடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு 2019 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி  கேரிபேக் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்கும் கடைகள்,  தயாரிக்கும் நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பொருட்களை  பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்கிடையே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னையை சேர்ந்த ஜெயா  பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 60 நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

வழக்கை விசாரித்த ஐகோர்ட், பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க மறுத்து விட்டது. பொருட்களை பேக்கிங் செய்யும் கவர்களுக்கு மட்டும் விலக்கு  அளிக்க வேண்டும் என பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த  ஐகோர்ட் பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த தடையை தமிழக அரசு முறையாக பயன்படுத்த  வேண்டும் என்றும் தேவையில்லாமல் வணிகர்களை துன்புறுத்தக்கூடாது எனவும் கூறினார். மேலும் தடை செய்யாத பிளாஸ்டிக் பொருட்களை  பறிமுதல் செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.  அப்போது, பிளாஸ்டிக் பொருட்களை தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு  தரப்பில் 16 மாநிலங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், தடை விதிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது என்று  வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 14 வகை பிளாஸ்டிக்கிற்கு தமிழக அரசு விதித்த தடை உத்தரவு செல்லும் என்று அதிரடி  தீர்ப்பளித்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான வியாபாரிகளின் மனுக்களை தள்ளுபடி செய்தனர்.  Tags : Tamil Nadu government imposes ban on 14 types of plastics: Chennai High Court
× RELATED நடிகர் சங்க தேர்தல் செல்லாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்