சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும்: மத்தியமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து திமுக எம்.பி.க்கள் கோரிக்கை

டெல்லி: சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  முன்னதாக சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது.  இந்த திட்டத்திற்காக ரூ.10 ஆயிரம் கோடி செலவிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. சுமார் 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட உள்ள இந்த 8  வழி சாலைக்கு காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலங்களை  கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

Advertising
Advertising

இதையடுத்து, விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட கோரி 5 மாவட்ட மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில்,  இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் காங்கிரஸ் வக்கீல் ஏ.பி.சூரியப்பிரகாசம், வக்கீல் வி.பாலு, 5 மாவட்ட  விவசாயிகள், தர்மபுரி எம்.பி அன்புமணி உள்ளிட்டோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்கு சுமார் 6  மாதங்களாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த  நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக 6 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர்.

வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. மேலும், சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம்  கையகப்படுத்துவதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜூன் 2-ம் தேதி அதிரடி தீர்ப்பு  வழங்கியது. சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. கடந்த சில நாட்களுக்கு  முன் இந்த வழக்கு விசாரணை வந்தபோது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு  தெரிவித்தது குறிப்பிடத்த்க்கது.

இந்நிலையில், சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிடுமாறு டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து திமுக  எம்.பி-க்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். சந்திப்பின்போது, திமுக மக்களவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், கவுதம் சிகாமணி, செந்தில்குமார்,  அண்ணாதுரை ஆகியோர் உடனிருந்தனர். இதற்கிடையே, நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்  சரவணணை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு சேலம்-சென்னை  8 வழிச்  சாலை திட்டம் மிக முக்கியமானது என தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தொடர்ந்து இந்த திட்டம் குறித்து பேசிவருகிறார்.  விவசாயிகளிடம் இத்திட்டம் குறித்து ஆலோதித்து பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு,  பசுமை வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என  எதிர்பார்க்கிறேன் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: