அடிப்படை அரசுப்பணிகளுக்கு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்கள் முறையாக பணியாற்றுவது இல்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

சென்னை : மதுரை: டிஎன்பிஎஸ்சி  குரூப்-3, குரூப்-4 போன்ற அடிப்படை அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கல்வித்தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்யவேண்டும் என நிர்வாகத்துறை முதன்மை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குருப் 4 தேர்வு எழுதி தேர்வானப் பிறகு பிஇ படித்திருந்தால் அந்த வேலை கிடைக்காமல் போனதை அடுத்து ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மனுவில் தனக்கு உரிய தகுதியுடைய அரசுப் பணியை வழங்கும்படி உத்தரவிடுமாறு மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், அடிப்படை அரசுப்பணிகளுக்கு தேர்வாகும் கூடுதல் கல்வித்தகுதி உடையவர்கள் முறையாக பணியாற்றுவது இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிலை அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்கள் ஆகியவற்றிலும் தொடர்ந்து வருகிறது. மேலும் இது போன்ற கூடுதல் கல்வி தகுதியுடையவர்கள் தங்களின் வேலை நேரங்களில் பணி செய்யாமல் பிற போட்டி தேர்வுகளுக்கு தயாராவதையே முக்கிய பணியாக வைத்துள்ளனர்.

எனவே இது போன்ற அரசு துறை பணிகளுக்கு தமிழ் நாட்டு அரசின் நிர்வாக துறை செயலாளர் குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை 3 மாத காலத்திற்குள் நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்துள்ளார்.

Related Stories: