குடிநீர் விநியோக பணிகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: குடிநீர் விநியோக பணிகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஜோலார்ப்பேட்டையிலிருந்து சென்னைக்கு காவிரி நீருடன் ரயில் புறப்பட தயாராகி வரும் நிலையில் முதல்வர் ஆலோசனையின் நடத்தி வருகிறார். அதேபோல, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடக்கும் குடிநீர் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.  

சென்னையில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையை போக்குவதற்கு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து நாளொன்றுக்கு 1 கோடி லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் கொண்டுவரப்படும் என்றும், இதற்கான நிதி ரூ.65 கோடி ஒதுக்கப்படும் என முதல்வர் அண்மையில் அறிவித்திருந்தார். அதற்கான பணிகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் ஜோலார்பேட்டையில் ரயில் நிலையத்தில் சோதனை ஓட்டம் என்பது நடைபெற்றது.

இந்த நிலையில், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 50 கேலன்கள் மூலமாக குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து வரும் தண்ணீர் தொடர்பாகவும், மற்ற மாவட்டங்களுக்கு குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாகவும் முதலமைச்சர் விரிவான ஆலோசனை நடத்தி வருகிறார்.

ஜோலார்பேட்டையில் இருந்து குடிநீர் கொண்டு வருவதில் சிக்கல்?

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் ரயில் நிலையத்தில் இருந்து  சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயிலில் உள்ள கேலன்களில் 50,000 லிட்டர் தண்ணீர் நிரப்புவதற்கு பதிலாக குடிநீர் வாரியம் 70,000 லிட்டர் நீர் நிரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேலன்களை பரிசோதித்த ரயில்வே நிர்வாகம் ஒரு கேலனில் 50,000 லிட்டர் நீருக்கு மேல் இருந்தால் ரயிலை இயக்க முடியாது என அறிவித்துள்ளது. ரயில்வேயின் இந்த அறிவிப்பையடுத்து ஒவ்வொரு கேலன்களில் இருந்தும் கூடுதலாக உள்ள 20,000 லிட்டர் நீரை வெளியேற்றும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கேலன்களில் உள்ள நீரை வெளியேற்றிய பிறகு தான் ரயில் புறப்படும் என்பதால் சென்னைக்கு தண்ணீர் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

Related Stories: