ஆனி கருட சேவை நடைபெறுவதால் இன்று மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம்!

காஞ்சிபுரம் : ஆனி கருட சேவை நடைபெறுவதால் இன்று காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஆகஸ்ட் 17 ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. அத்திவரதர் முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.  

காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 11-ம் நாளான இன்று பட்டாடை அணிவித்து திருவாராதனம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காலை 5 மணி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அதிகாலையில் இருந்தே தமிழகம், கர்நாடகம் , ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அத்திவரதர் உற்சவத்தைக் காண பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அத்தி வரதர் தரிசனத்திற்கான நேரம் அதிகரிக்கப்பட்டிருந்தது. காலை 5 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அத்தி வரத சுவாமி பக்தர்கள் தரிசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆனி கருட சேவை நடைபெறுவதால் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்திவரதர் தரிசனம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நாளை ராம்நாத் கோவிந்த் வருகை :

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். நாளை  பிற்பகல் 2.10 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்பு உடனடியாக தனி ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் புறப்பட்டு செல்கிறார். அங்கு அத்தி வரதரை தரிசனம் செய்கிறார். மேலும் நாளை மறுநாள் துணை ஜனாதிபதி வெங்கய நாயுடு அத்தி வரதரை தரிசனம் செய்ய வருகிறார்.

Related Stories: