×

தொலைத்தொடர்பு நிறுவன விதிமுறையால் இழப்பை சந்திக்கும் செல்போன் தொழில்

இந்தியாவில் தொலைத் தொடர்பு சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் மட்டும் நடத்தி வந்த வேலையில், வீடுகளுக்கு கம்பி மூலம் போன் வசதி செய்யப்பட்டு வந்தது. அந்த காலக்கட்டத்தில் உள்ளூரை தவிர்த்து அடுத்த ஊருக்கு தொடர்பு கொள்ள வேண்டுமானால், டிரங்க்கால் மூலமே தொடர்பு கொள்ள வேண்டும். அவ்வாறு தொடர்பு கொள்ளும்போது, போன் செய்தவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டி வந்தது.

இந்நிலையில் இந்தியாவில் தொலைத் தொடர்பு வசதி மேம்பட்ட நிலையில் தனியாரும் அனுமதிக்கப்பட்ட பின்பு செல்போன் சேவை அசுர வேகத்தில் வளர்ச்சியை கண்டது. தொலைத்தொடர்பு துறையின் அசுர வளர்ச்சியைக் கண்ட படித்த இளைஞர்கள், தங்கள் பகுதிகளில் குறைந்த முதலீட்டில், செல்போன் கடைகளை திறந்தனர். செல்போன் கடைகளில் செல்போன் விற்பனை, ரீசார்ஜ் கார்டு விற்பனை, சிம்கார்டு விற்பனை, செல்போன் கவர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விற்பனை, பென்டிரைவ், மெமரி கார்டு போன்றவற்றை விற்பனை செய்ததின் மூலம் அவர்களுக்கு கணிசமான லாபம் கிடைத்தது.

இந்த நிலையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள்(பி.எஸ்.என்.எல் தவிர)ரூ.10, 20, 30க்கும் விற்பனை செய்து வந்த ரீசார்ஜ் கார்டுகளை நிறுத்தியது. அதற்கு பதிலாக ரூ.35, 65, 95 மதிப்பிலான மாதாந்திர ரீசார்ஜ்களை அறிமுகம் செய்தது. மேலும் அன்லிமிடெட் என்ற பெயரில் மாதம் முழுதும் இலவசமாக பேசும் ரீசார்ஜ்களை அறிமுகம் செய்தது. மாதாந்திர இலவசமாக பேசும் ரீசார்ஜ்கள் அறிமுகம் செய்யப்பட்டதால், கடைகளில் ரீசார்ஜ் செய்ய அடிக்கடி கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்தது. செல்போன் நிறுவனங்களின் அப்ஸ், வங்கிகளின் அப்ஸ்கள் மூலம் ரீசார்ஜ்கள் செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளதால், செல்போன் கடைக்காரர்கள் பெரிய அளவில் வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றனர். இதனால் செல்போன் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்ததாலும் அவர்கள் வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலையில் மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், புதிய சிம் கார்டு விற்பனைக்கு பல்வேறு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

முன்பு ஆதார் கார்டு எண் இருந்தால், வாடிக்கையாளர்கள் கைரேகை பதிவு செய்யும் டிவைஸில் கைரேகை பதிந்து சிம் கார்டு பெற முடியும். ஆனால் தற்போது ஒவ்வொரு செல்போன் நிறுவனத்தின் சிம் கார்டையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஒரு ஸ்மார்ட் போன் வாங்கி, அதில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் நெட் இணைப்பை பெற்றும், அதில் வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்களின் புகைப்படத்தை பதிவு செய்தால் மட்டுமே சிம்கார்டு பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தனித்தனி ஸ்மார்ட் போன், தனித்தனி நெட் இணைப்பு என கொண்டு வந்ததால், செல்போன் கடைக்காரர்கள் 4 ஸ்மார்ட் போன்களை குறைந்தது ரூ.25 ஆயிரத்திற்கு வாங்க வேண்டியதுடன், மாதந்தோறும் 4 தொலைத் தொடர்பு நிறுவனத்திற்கும் மாதந்தோறும் சுமார் ரூ600க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் கடை வைத்துள்ளவர்கள் மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Tags : Cell phone, industry
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...