பரிசோதனை நிலையத்தில் விவசாயிகளே ஆய்வு செய்யலாம்

விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்த விதைகள் தரம் குறித்து விதை பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்து பயன்பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. விதைப்பு மேற்கொள்வதற்கு முன்பு விதைத்தரம் அறிந்து விதைப்பு செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். தற்போது சாகுபடி பருவம்தொடங்க இருப்பதால் விவசாயிகள் தரமான விதைகளை உபயோகிக்க வேண்டும். விவசாய சாகுபடி பரப்பில் 30 முதல்40 சதவீதம் மட்டுமே அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மூலம் சான்று பெற்ற விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. மீதமுள்ள பரப்பில் தற்போது சாகுபடி பருவம் துவங்க உள்ளதால் விவசாயிகள் தாங்களே உற்பத்தி செய்த விதைகளை விநியோகம் செய்தும் பயன்படுத்தியும் வருகின்றனர். மேலும் காய்கறி பயிர்களில் தங்கள் சொந்த விதைகளையே பயன்படுத்தி வருகின்றனர். இவ்விதம் தாங்களாக உற்பத்தி செய்து பயன்படுத்திவரும் விதைகள் நாளடைவில் வீரியம் குறைந்து மகசூலும் பாதிப்படைகிறது. இதனால் அந்த விதைகள் தரத்துடன் உள்ளனவா என அறிந்து விதைத்திட விதைப்பரிசோதனை அவசியம்.

விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள், விதை விற்பனையாளர்கள் தங்களிடம் இருப்பில் உள்ள விதைகளின் தரத்தை அறிய பணிவிதை மாதிரிக்கு ரூ.30 கட்டணத்தை நேரிலோ அல்லது மணி ஆர்டர் மூலமாகவோ மூத்த வேளாண்மை அலுவலர், விதைப்பரிசோதனை நிலையம், 15-பி, பெரியமில்தெரு, விஜயபுரம், திருவாரூர் என்ற முகவரிக்கு அனுப்பலாம். விதை மாதிரி அனுப்பும் விவசாயி பெயர், தந்தைபெயர், முகவரி, அலைபேசி எண், மின்னஞ்சல்முகவரி மற்றும் பயிரின் வகை, ரகம். மற்றும் குவியல் எண் ஆகியவற்றுடன் விதைகளை துணிப்பையில் வைத்து அனுப்ப வேண்டும்.

மேலும் பயிர்களின் விதைகளை விதைப்பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பும்போது விதைமாதிரியின்அளவு மக்காச்சோளம், நிலக்கடலை 500கிராம், பிரெஞ்சு பீன்ஸ், அவரை - 450 கிராம், கொண்டைக்கடலை - 400 கிராம், கொள்ளு, பட்டாணி, புடலை, பூசணி, ஆமணக்கு - 250 கிராம், துவரை, உளுந்து, பீர்க்கன், சோயா, பஞ்சுநீக்கிய பருத்தி - 150 கிராம், சூரியகாந்தி, வீரிய ஒட்டு ரக பருத்தி, வெள்ளரி, சுரைக்காய், கொத்தவரை, பூசணி, தர்பூசணி, வெண்டை, பரங்கி - 100 கிராம், நெல், சனப்பு, கீரை வகைகள், பீட்ரூட், முள்ளங்கி - 50 கிராம், கம்பு, ராகி, தக்கைப்பூண்டு, பாலக்கீரை, புளிச்சகீரை - 5 கிராம், கத்திரி, தக்காளி, வெங்காயம், முட்டைகோஸ், காலிபிளவர், நூல்கோல், கேரட்- 10 கிராம்என்ற அளவில் பகுப்பாய்வுக்கு அனுப்பவேண்டும். இளவிதை அனுப்பிய விவசாயிகள் விவரங்கள் ஸ்பெக்ஸ் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விதைப்பரிசோதனையின் பகுப்பாய்வு முடிவுகள் இருப்பிட முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தங்கள்அலைபேசிக்கே அனுப்பப்படும் என திருவாரூர் விதைப்பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: