உயிருக்கு உலை வைக்கும் உணவுப்பொருட்கள் கலப்படம்

மனிதன் உயிர் வாழ்வதற்கும், உடலை பேணி பாதுகாப்பதற்கும் அவசியமானது உணவு. ஆனால் இந்த உணவிலும், உணவு பொருட்களிலும் கலப்படம் என்பது சாதாரணமாகி வருகிறது. இன்றைய இயந்திரத்தனமான அவசர வாழ்க்கையில் வாங்கும் உணவு பொருள் தரமானதா என பார்க்க முயற்சிப்பதில்லை. இவ்வாறு கலப்படம் மிகுந்த உணவு பொருட்களை சாப்பிடுவதால் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது. காபித்தூளில் புளியங்கொட்டை தூள் கலப்பதால் இரைப்பை கோளாறு, மூட்டுவலி ஏற்படுகிறது. தேயிலை தூளோடு ஏற்கனவே பயன்படுத்திய தேயிலைத்தூளோ மரத்தூளோ கலக்கப்படுகிறது. இதனால் கல்லீரல் பிரச்னை, செரிமான சிக்கல் ஏற்படும்.

Advertising
Advertising

பால், பாலாடையுடன் மாவு அல்லது சில வேதிப் பொருள் கலக்கப்படுகிறது. இதனால் செரிமானத் தொல்லை ஏற்படுகிறது. கரு மிளகுடன் பப்பாளி விதை மற்றும் சொத்தையான மிளகுகளை சேர்ப்பதால் இரைப்பை, கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.

தூள் உப்புடன் சாக்பீஸ் பவுடர், வெள்ளை கல்நார் கலக்கிறார்கள். இதனால் செரிமானத் தொல்லை ஏற்படுகிறது. கடுகு எண்ணெய்யுடன் ஆர்ஜிமோன் எனும் தரம் குறைந்த எண்ணெய் சேர்ப்பதால் பார்வை இழப்பு, இதய நோய் மற்றும் புற்று நோய் கூட வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

கனிம எண்ணெய் கலந்து விற்கப்படும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் இதய பாதிப்பு, புற்று நோயும் உருவாகலாம். மிளகாய்த் தூள் நல்ல கலராக இருக்க வேண்டும் என்று சேர்க்கப்படும் மரத்தூள், செங்கல் தூளால் இரைப்பை கோளாறு ஏற்படுகிறது. குளிர்பானங்கள் தயாரிக்கும்போது செயற்கை நிறமூட்ட வேதிப்பொருள்களை சேர்கிறார்கள். இதனால் கண், எலும்பு, தோல், நுரையீரல் பாதிப்பு ஏற்படலாம். தானிய வகைகளிலும் நறுமண உணவுப் பொருட்களிலும் செயற்கை பளிங்கு கல் துகள்கள் கலப்பதால் பற்கள், ஈறுகள், இரைப்பை, கல்லீரல், குடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. இனிப்பு, இறைச்சி, ஐஸ்கிரீம் இவற்றில் வேதிப்பொருளான சாக்கரின்  சேர்ப்பதால் ஜீரண மண்டல கோளாறு ஏற்படும்.

கலப்படங்களை கண்டறிய முடியுமா?

சர்க்கரை: சர்க்கரையில் சுண்ணாம்புத்தூள் கலந்திருந்தால் அதை கண்டுபிடிக்க, ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரையை கரைக்க வேண்டும். சர்க்கரை கரைந்து விடும் சுண்ணாம்பு கிளாசின் கீழே படியும்.

பெருங்காயம் : பெருங்காயத்தில் கோந்து அல்லது மர பிசின் கலப்படம் செய்யப்படுகிறதாம். பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்துப் பார்ததால் தண்ணீர் வெள்ளையாக இருந்தால் கலப்படமில்லை.

மஞ்சள் தூள்: மஞ்சள் தூள் மற்றும் பருப்பு வகைகளில் மெட்டானில் என்ற ரசாயனம் சேர்க்கிறார்கள். இதனை கண்டுபிடிக்க, ஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தில் மஞ்சள் தூளையோ அல்லது பருப்பு போட்டாலோ கலப்படமாக இருந்தால் அது ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிடும்.

மிளகாய்த் தூள்: மிளகாய்த்தூளில் கலப்படம் கண்டுபிடிக்க நீரில் கரைத்தால் மரத்தூள் என்றால் தண்ணீரின் மேலே மிதக்கும். கலர்ப்பொடி என்றால் தண்ணீரின் நிறம் மாறிவிடும். செங்கற்பொடி சீக்கிரத்திலேயே அடியில் தங்கிடும்.

பால் : பாலில் மசித்த உருளைக்கிழங்கு அல்லது பிற மாவுகள் கலக்கப்படுகிறது. பாலில் ஒரு சொட்டு டிஞ்சர் அயோடின் சேர்த்தால் கலப்படப் பாலாக இருந்தால் அதன் நிறம் மாறிடும்.

ஜவ்வரிசி : ஜவ்வரிசியில் நிறம் மாற்றப்பட்ட மணல் மற்றும் டால்கம் பவுடர் கலக்கப்படுகிறது. சிறிதளவு வாயில் போட்டு மென்று பாருங்கள். கல் இருந்தால் நற நறவென்று இருக்கும். ஜவ்வரிசியை வேக வைத்தால் கலப்படமில்லாத ஜவ்வரிசி மட்டுமே பெரிதாகும்.

தேங்காய் எண்ணெய் : தேங்காய் எண்ணெயில் கலப்படத்தை கண்டுபிடிக்க ஒரு பாட்டிலில் எண்ணெய் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்தால் அது உறைந்தால் கலப்படமில்லை.

உப்பு : உப்பில் வெள்ளைக் கல் தூள் மற்றும் சுண்ணாம்பு சேர்க்கிறார்கள். தண்ணீரில் உப்பைக் கரைத்தால் சுண்ணாம்பு கலக்கப்பட்டிருந்தால் தண்ணீர் வெள்ளை நிறமாக மாறிடும்.

தேன்: தேனில் சர்க்கரை பாகு கலப்படம் செய்யப்படுகிறது. சுத்தமான தேன் என்றால் விளக்கில் ஊற்றினால் எரியும். கலப்படம் இருந்தால் எரியாது.

ஐஸ் கிரீம் : ஐஸ் கிரீமில் சில துளி எலுமிச்சை சாறு ஊற்றினால் சின்ன சின்ன குமிழ்கள் உண்டானால் அது கலப்பட ஐஸ் கிரீம் ஆகும்.

கலப்பட உணவு பொருட்களால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கலப்படத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

Related Stories: