×

ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அம்சம் கொண்ட இந்தியாவின் முதல் மின்சார பைக் மாடலாக ரிவோல்ட் ஆர்வி400 அண்மையில் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. வரும் ஜூலை 22-ந்தேதி இப்புதிய மின்சார பைக் மாடல்  விற்பனைக்கு வர உள்ளது. டெல்லி உள்ளடக்கிய என்சிஆர் பிராந்தியத்தில் முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, அடுத்த 4 மாதங்களுக்குள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை ஆகிய  நகரங்களிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். இந்த பைக்கில் முழுமையான எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், புளூடூத் இணைப்பு வசதிகள் உள்ளன. இதன் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரை ஸ்மார்ட்போன்  மூலமாக இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதனை வைத்து வண்டியின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களையும், வசதிகளையும் பெற முடியும். இந்த பைக்கின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால், 156 கி.மீ தூரம் வரை  பயணிக்க முடியும்.

மணிக்கு 85 கி.மீ வேகம் வரை செல்லும். நான்கு வழிகளில் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய இயலும். இதனால், தினசரி பயன்பாட்டிற்கு மிகச்சிறப்பான மின்சார பைக் மாடலாக இருக்கும்.இதன் லித்தியம் அயான்  பேட்டரியை 15A சாக்கெட் மூலமாக 4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம். பேட்டரியை தனியாக கழற்றி எடுத்துக்கூட சார்ஜ் செய்ய முடியும். சமையல் சிலிண்டர் மாற்றுவதுபோல, முழுமையாக சார்ஜ் ஏற்றப்பட்ட பேட்டரியை  அருகிலுள்ள ரிவோல்ட் டீலரிடமிருந்து வாங்கலாம். ஸ்மார்ட்போன் மூலமாகவே ஆர்டர் செய்யலாம். புதிய ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக் ரிபெல் ரெட் மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வர  இருக்கிறது. இப்புதிய மின்சார பைக் ₹1 லட்சம் டெல்லி ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, இப்புதிய மின்சார பைக்கிற்கு பதிவு கட்டணத்தில் இருந்து விலக்கு பெறும்  வாய்ப்புள்ளது.


Tags : Revolt , Boardroom, Electric ,Bike
× RELATED 10 இ-பைக்குகள் எரிந்து நாசம்