குடிநீர் வழங்கக்கோரி அதிமுக எம்எல்ஏவை பெண்கள் முற்றுகை: வத்திராயிருப்பு அருகே பரபரப்பு

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வந்த அதிமுக எம்எல்ஏவிடம் குடிநீர் கேட்டு பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகமெங்கும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. தண்ணீருக்காக மக்கள் பல கிமீ தூரம் காலிக்குடங்களுடன் அலைந்து வருகின்றனர். மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே, தம்பிபட்டியில் திருவில்லிபுத்தூர் அதிமுக எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3.50 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து பைப்லைன் பதிக்கப்பட்டது. இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக எம்எல்ஏ சந்திரபிரபா நேற்று திறந்து வைத்தார். அப்போது தம்பிபட்டி 3வது வார்டைச் சேர்ந்த பெண்கள் குடிநீர் கேட்டு எம்எல்ஏவை முற்றுகையிட்டனர்.

பின்னர், ‘‘ஊராட்சி மூலம் 20 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அன்றாட புழக்கத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்படுகிறோம்’’ என புகார் தெரிவித்தனர். இதற்கு எம்எல்ஏ உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: