×

உசிலம்பட்டியில் லேப்டாப் வழங்கக்கோரி 7 மணிநேரம் சாலை மறியல்: அடுத்தடுத்து 4 இடங்களில் நடந்தது

உசிலம்பட்டி: தமிழகம் முழுவதும் 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. இதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம், எழுமலை உசிலம்பட்டி - எம்.கல்லுப்பட்டி சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் நேற்று பள்ளி எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைமை ஆசிரியர்  ஜாம்பிரசாத் ராஜா மற்றும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. காலை 10 மணிக்கு தொடங்கிய மறியல் மாலை 5 மணிவரை  நீடித்தது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.இறுதியில் பேரையூர் தாசில்தார் ஆனந்தி ‘‘உங்களுக்கு லேப்டாப் வழங்கும் வரை மற்ற மாணவர்களுக்கும் வழங்கமாட்டோம்.  உங்களுக்கு எப்போது வழங்க அரசு உத்தரவிடுகிறதோ அதுவரை நிறுத்தி வைக்கிறோம்’’ என உறுதியளித்தார்.

இதையடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவர்களின்  போராட்டத்தால் அப்பகுதியில் 7 மணிநேரம் போக்குவரத்து தடைபட்டது.இதேபோல், எழுமலை அருகே தாடையப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் தாடையம்பட்டி - டி.ராமநாதபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உசிலம்பட்டி டிஇஎல்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உசிலம்பட்டி - பேரையூர் சாலையில் போராட்டம் நடத்தினர். வெள்ளைமலைப்பட்டி பள்ளி மாணவ, மாணவியர் உசிலம்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

எம்எல்ஏ வீட்டை முற்றுகையிடுவோம்
எழுமலை பள்ளி மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு லேப்டாப் வழங்காமல் மற்ற மாணவர்களுக்கு வழங்கினால்  உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் உள்ள மாணவ, மாணவிகளை  ஒன்று திரட்டி உசிலம்பட்டி எம்எல்ஏ வீட்டை முற்றுகையிட்டு மிகப்பெரிய  போராட்டம் நடத்துவோம்’’ என எச்சரித்தனர். 


Tags : Ussilampatti,laptop , 7 hours road stir, 4 successive places
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...