ஈரோட்டில் லேப்டாப் வழங்கும் விழாவில் நிருபர்களை தாக்கியதாக அதிமுக எம்எல்ஏ மகன் கைது

ஈரோடு: ஈரோட்டில் நடந்த இலவச லேப்டாப் வழங்கும் விழாவில் பத்திரிகை நிருபர்களை தாக்கியதாக அதிமுக எம்எல்ஏ மகன் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோட்டில் பல்வேறு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கடந்த 24ம் தேதி இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அதிமுக எம்எல்ஏக்கள் ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு நடப்பு கல்வியாண்டில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கினர். அப்போது, கடந்த ஆண்டு மாணவ-மாணவிகள் தங்களுக்கும் லேப்டாப் வழங்க வலியுறுத்தி எம்எல்ஏக்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால், எம்எல்ஏக்கள் மாணவர்களின் கோரிக்கையை ஏற்காமல் சென்றதால், அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதேபோல், ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், முன்னாள் மாணவ-மாணவிகள் லேப்டாப் வழங்காததை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டனர். இதையடுத்து, எம்எல்ஏக்கள் மாணவ-மாணவிகளின் பிரதிநிதிகளை அழைத்து தனி வகுப்பறையில் பேச்சு நடத்தினர்.
Advertising
Advertising

இந்த நிகழ்வை செய்தி சேகரிப்பதற்காக நாளிதழ் நிருபர் மற்றும் வார பத்திரிகை நிருபர் ஆகியோர் சென்றனர். அப்போது, அதிமுக எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன்பிரித்திவ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 நிருபர்களை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த நிருபர்களை, சக நிருபர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நிருபர்கள் ஈரோடு எஸ்பி சக்தி கணேசனிடம் புகார் மனு அளித்தனர். அதன்பேரில், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி, அதிமுக எம்எல்ஏ ராமலிங்கத்தின் மகன் ரத்தன் பிரித்திவ் (29) உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் அதிமுக எம்எல்ஏ. மகன் ரத்தன் பிரித்திவ் மற்றும் அதிமுகவை சேர்ந்த அவல்பூந்துறை விஜய் (25), பெரியார் நகரை சேர்ந்த சிவக்குமார் (42), சரவணன் (41), ஜெயபாலாஜி (51) ஆகிய 5 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரையும் போலீசார் ஜாமீனில் விடுவித்தனர்.

Related Stories: