கலெக்டர், டிஆர்ஓ மீது புகார்கூறிய விழுப்புரம் ஆர்டிஓ இடமாற்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் மீது குற்றம்சாட்டிய வருவாய் கோட்டாட்சியரை இடமாற்றம் செய்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் நேற்று தனது அலுவலகத்தில் பணியை மேற்கொண்டார்.விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) குமாரவேல் கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பொறுப்பேற்றார். 9 மாதங்களே ஆனநிலையில் அவர் திடீரென்று கடந்த 20ம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் மறுநாளே அவரை பணியிலிருந்து விடுவித்தது. இதனிடையே அவரது மாற்றத்திற்கு பின்னால் பெரும் சதி நடந்திருப்பதாகவும்,  பழிவாங்கும் நடவடிக்கை என்றும், மாவட்ட கலெக்டர், வருவாய் அலுவலர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இச்சம்பவம் வருவாய்த்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இடமாற்றத்தை எதிர்த்து குமாரவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 24ம் தேதி மனுதாக்கல் செய்தார். அதில், நான் விழுப்புரத்தில் பொறுப்பேற்ற 9 மாதத்திலேயே என்னை இடமாற்றம் செய்துள்ளனர், இதில் உள்நோக்கம் உள்ளது. மாவட்ட ஆட்சியர் நிர்வாகத்தின் மீது தலைமை செயலாளருக்கு புகார்மனு அளித்ததால் தான் பழிவாங்கப்பட்டதாக கூறியிருந்தார். இந்தமனு மீது நேற்று காலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணை நடந்தது. அதில், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் குமாரவேல் இடமாற்றத்திற்கு தடைவிதித்தும், மீண்டும் அவர் பணியை தொடரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து இவ்வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்று பகல் 2.45 மணியளவில் வருவாய்கோட்டாட்சியர் குமாரவேல் விழுப்புரம் அலுவலகம் வந்து தனது பணிகளை தொடங்கினார்.

Related Stories: