மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பள்ளியின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்: ஒருவர் கவலைக்கிடம்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே அரசு உதவி பெறும் பள்ளி கட்டிட பால்கனி சுவர் இடிந்து 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு கோபுரம் அருகே அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இப்பள்ளி பல ஆண்டுகளாக பழமையான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முதல் மாடியில் உள்ளன. ஏற்கனவே இந்த கட்டிடத்தில் உள்ள பால்கனி சிதிலமடைந்து இருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. நேற்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.முதல் மாடியில் உள்ள வகுப்பறைக்கு மாணவர்கள் சென்று கொண்டிருந்தபோது, பழுதான பால்கனி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பால்கனியில் நடந்து சென்ற பிளஸ் 1 மாணவர்களான சாமநத்தத்தை சேர்ந்த சக்திவேல் (16), பெருங்குடியை சேர்ந்த குமரவேல் பாண்டி (16) இடிந்த கட்டிடத்துடன் சேர்ந்து கீழே விழுந்தனர். கீழே நின்ற சிலைமானை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் வீரக்குமார் (17) தலையில் இடிபாடுகள் விழுந்ததால் படுகாயமடைந்தார். மேலிருந்து விழுந்த சக்திவேலுக்கு கால் எலும்பு முறிந்தது. மற்றொரு மாணவர் குமரவேல் பாண்டியும் படுகாயமடைந்தார். சத்தம் கேட்டு மற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் ஓடி வந்தனர்.

Advertising
Advertising

உடனடியாக கோயில் ஆம்புலன்ஸ் மூலம் 3 மாணவர்களும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வீரக்குமார் கவலைக்கிடமாக உள்ளார்.  இதற்கிடையில் பள்ளிக்கு வந்த தீயணைப்பு துறையினர், மாணவர்கள் யாரும் மாடியில் உள்ள வகுப்பறைகளுக்கு செல்லக்கூடாது என தடை விதித்து சீல் வைத்தனர். மேலும் அவர்கள் ஆய்வு செய்ததில் மழையால் தண்ணீர் தேங்கி பால்கனி ஸ்திரத்தன்மை இழந்திருந்தது தெரிந்தது. இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தில், மேலும் சில இடங்களில் சிமென்ட் பெயர்ந்து, கம்பிகள் வெளித்தெரிந்து, எப்போதும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: