தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கோரி சிபிஐ மனு

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் தங்களின் விசாரணைக்கு மேலும் அவகாசம் வழங்கக்கோரி சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாயினர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.  பலியானவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும்  என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு பொதுநல மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரணை நடத்தி, 4 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஐ இயக்குநர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மேலும் ஒரு துணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

அதில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக 222 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இவற்றை சிபிசிஐடி போலீசார் விசாரித்த நிலையில்தான் சிபிஐக்கு மாற்றப்பட்டது. இதன்பிறகு, அக்.8ல்தான் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. தற்போது 160 ஆவணங்கள் தொழில்நுட்ப ஆய்விற்காக அனுப்பப்பட்டதில், 100 ஆவணங்களுக்குரிய விளக்கம் கிடைத்துள்ளது. மேலும் கிடைக்க வேண்டியுள்ளது. 300 பேரிடம் விசாரித்து, 316 ஆவணங்களை சேகரித்துள்ளோம். துப்பாக்கிச்சூடு நாளன்று நடந்த நிகழ்வுகள், அதற்கான காரணங்கள், அனுமதியின்றி கூடியது, ஆயுதங்கள் வைத்திருந்தனரா, பல்வேறு வகையான காரணங்கள் உள்ளிட்டவை குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. இதற்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர் மனு மீதான விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: