கணினி பயிற்றுநர் தேர்வு ரத்து கோரிய மனு தள்ளுபடி

மதுரை: கணினி பயிற்றுநர் தேர்வை ரத்து செய்யக்கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.  திருச்சி மாவட்டம், முசிறி, செவந்தலிங்கபுரத்தை சேர்ந்த ப்ரியா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாகவுள்ள 814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வாணையம் கடந்தாண்டு வெளியிட்டது. தொடர்ந்து ஜூன் 23ல் ஆன்லைன் தேர்வு நடக்கும் என கடந்த மார்ச் 1ல் அறிவிப்பு வெளியானது. 119 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த மையங்களில் போதிய அடிப்படை வசதி செய்யப்படவில்லை. பல இடங்களில் இணையதள சேவை பாதிக்கப்பட்டிருந்தது. பல இடங்களில் சர்வர்கள் முறையாக இயங்கவில்லை. இதனால் பலர் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டது.

Advertising
Advertising

ஜூன் 24ல் டிஆர்பி வெளியிட்ட அறிவிப்பில், இணையதள சேவை பாதிப்பால், தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்காக இரண்டாம் கட்டமாக ஜூன் 27ல் (இன்று) ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பெரும் குழப்பம் ஏற்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பல இடங்களில் முறையாக நடக்கவில்லை. இதே தேர்வு மீண்டும் நடக்கும்போது மேலும் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது. எனவே, ஏற்கனவே நடந்த தேர்வை ரத்து செய்து, ஜூன் 27ல் நடக்கவுள்ள தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும். முறையாக புதிதாக அறிவிப்பு வெளியிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.புகழேந்தி ஆகியோர், மனுதாரர் தனது கோரிக்கை குறித்து டிஆர்பியிடம் முறையிடாமல், நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: