தமிழ்நாடு வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 10 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த மே 8ம் தேதி முதல் ஜூன் 17 வரை இணையதளம் மூலமாக பெறப்பட்டது. மொத்தமாக 51 ஆயிரத்து 876 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 41 ஆயிரத்து 590 விண்ணப்பங்கள் தகுதியுடையவையாக தேர்வு செய்யப்பட்டன.  இந்நிலையில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதனை  துணை வேந்தர் குமார், பல்கலை இணையதளத்தில் வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 இணைப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 3 ஆயிரத்து 905 இடங்கள் உள்ளன.

 இந்தாண்டு 41 ஆயிரத்து 590 தகுதியுடைய விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 18 ஆயிரத்து 30 பேர் ஆண்கள். 23 ஆயிரத்து 560 பேர் பெண்கள். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு வேளாண் படிப்புகளில் சேர அதிகளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

 இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்ற மாணவி முதலிடத்தை பிடித்துள்ளார். புதுக்கோட்டையை சேர்ந்த சிவாலினி மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த ஆலன் ஆகியோர் அடுத்த இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். மருத்துவ கலந்தாய்வு முடிந்து 10 நாட்களுக்கு பிறகு வேளாண் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆகஸ்ட் 2வது வாரத்தில் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விவசாய படிப்புக்கு மவுசு அதிகரிப்பு

வேளாண் பல்கலை.,யில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களில் பெரும்பாலானோர் பிஎஸ்சி. அக்ரி பாடப்பிரிவுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர். இதன்மூலம் அந்த பாடப்பிரிவில் மட்டும் ஒரு சீட்டுக்கு 70 மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இதுகுறித்து துணைவேந்தர் கூறுகையில், ‘‘வேளாண் படிப்புகள் அனைத்திற்கும் தற்போது மவுசு கூடியுள்ளது. அக்ரி படித்தவர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்பு உறுதியாக கிடைக்கிறது. எனவே அந்த படிப்புக்கு மாணவர்கள் மத்தியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என்றார்.

Related Stories: