இரைக்காக தூக்கி சென்றது வேட்டைக்காரர் முதுகெலும்பை உடைத்து ஒரு மாதமாக குகையில் வைத்திருந்த கரடி

மாஸ்கோ: ரஷ்யாவில் இரைக்காக ஒருவரை தூக்கிச் சென்ற கரடி அவரது முதுகெலும்பை உடைத்து குகையிலேயே ஒரு மாதமாக வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேட்டைக்காக சென்ற குழுவினர் மூலமாக அவர் மீட்கப்பட்டுள்ளார்.

ரஷ்யாவை சேர்ந்த சிலர், அந்நாட்டின் துவா மலைப்பகுதிக்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளனர். மலைப்பகுதிக்கு சென்ற நிலையில், அவர்களுடன் சென்ற வேட்டை நாய்கள் கரடி குகை ஒன்றினை பார்த்து குரைத்துள்ளன. இதனால் அவர்கள் குகையில் ஏதோ இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளனர். பின்னர் மிகுந்த எச்சரிக்கையுடன் குகைக்குள் சென்று அவர்கள் சோதனை செய்துள்ளனர். அப்போது வெறும் எலும்புடன் மம்மி போன்று ஒன்று அங்கு இருந்துள்ளது. அந்த உடலை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் அருகே சென்று பார்த்தபோது அது உடல் அல்ல என்பதும் உடல் மெலிந்த நிலையில் ஒருவர் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை மீட்ட அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அவரது பெயர் அலெக்சாண்டர் என தெரியவந்துள்ளது. சுமார் ஒரு மாதங்களாக அவர் அந்த குகையில் கிடந்துள்ளார். இரைக்காக கரடி ஒன்று அவரை தூக்கி சென்றுள்ளது. அப்போது அவரது முதுகெலும்பை அது உடைத்துள்ளது. தேவைப்படும்போது உண்பதற்காக அந்த நபரை அது குகையில் கொண்டு சென்று போட்டுள்ளது. முதுகெலும்பு உடைந்ததால் நடக்க முடியாத நிலையில், தனது சிறுநீரையே குடித்து அவர் உயிர் வாழ்ந்ததாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் சாத்தியமில்லை என்றும், சிறுநீர் குடித்து ஒரு மாதமாக அவர் உயிரோடு இருப்பது அதிசயம்தான் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். கரடியால் தூக்கி செல்லப்பட்டவரது விவரம், அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையின் விவரங்கள் உள்ளிட்டவை வெளியிடப்படவில்லை.

Related Stories: