தனி ஆளாக 3 கிமீ.க்கு கால்வாய் வெட்டி பத்மஸ்ரீ விருது பெற்றவர் எறும்பு முட்டைகளை சாப்பிட்டு உயிர் வாழும் சாதனை மனிதன்

புவனேஸ்வர்: தனியொரு மனிதனாக மலையை குடைந்து 3 கிமீ.க்கு கால்வாய் வெட்டி, 100 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தி கொடுத்த ஒடிசா விவசாயிக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்ததே தவிர, ஒருவேளை உணவு கிடைக்கவில்லை. எறும்பு முட்டையை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இந்த ‘கால்வாய் சாதனை மனிதன்!’‘பத்ம விருது’ என்பது மத்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் 4 உயரிய விருதுகளில் ஒன்று.  ஒவ்வொரு ஆண்டும் கலை, அறிவியல், தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூகசேவை மற்றும் பொது வாழ்வில் சிறப்பாக பங்காற்றிய குடிமக்களுக்கு இதை வழங்கி கவுரவிக்கிறது. இதை பெறுபவர்களுக்கு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த விருதை கடந்தாண்டு பெற்ற பெருமைக்குரிய ஏழை விவசாயி ஒருவர், இப்போது ஒருவேளை உணவுக்கு கூட வழியின்றி தவித்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. நாடு, சமுதாயத்தின் மீது அக்கறை காட்டும் சாதாரண மனிதனுக்கும், அவனுடைய சாதனைகளுக்கும் பாராட்டும், விருதையும் தவிர வேற எந்த பொருளாதார அங்கீகாரமும் கிடைக்காது என்பதற்கு இவர் ஒருவரே 100க்கு 100 சிறந்த உதாரணம். இதோ, அவருடைய பரிதாப கதை...

அவர் பெயர் தாய்தரி நாயக். வயது 75. தள்ளாத வயது என்றாலும், உழைத்து முறுக்கேறிய மெல்லிய தேகம். ஒடிசா மாநிலம், கெனோஜார் மாவட்டத்தில் உள்ள தலபாய்தாரனி கிராமம், அவருடைய சொந்த ஊர். பழங்குடி இனத்தை சேர்ந்தவர். விவசாய கூலி வேலை செய்தும், ஊரில் கிடைக்கும் சிறிய வேலைகளை செய்தும் பிழைப்பை ஓட்டியவர்.இப்படிப்பட்ட இவருக்குதான் கடந்த பிப்ரவரியில் பத்ம விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு. இவருக்கு விருது கிடைப்பதற்கான பின்னணி மிக சுவாரசியமானது. இந்த பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அவை நீரின்றி வறண்டு கிடந்தன. ஒரு காலத்தில் பசுமையாக இருந்த நிலங்கள், இப்படி காய்ந்து வாய் பிளந்து கிடக்கிறதே என அடிக்கடி அவருடைய மனம் வெதும்பும்.இவருடைய கிராமத்துக்கு அருகே கோனாசிகா என்ற மலை உள்ளது. அதன் பின்னால், பெரிய குளம் ஒன்று நீர் வளத்துடன் இருந்தது. அதை விவசாயத்துக்கு பயன்படுத்துவதற்கான முயற்சியை உள்ளூர் விவசாயிகளும் எடுக்கவில்லை; மாநில அரசும் அதை பற்றி கவலைப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளும் அது பற்றிய  நினைப்பே இல்லாமல் இருந்தனர்.

ஆனால், நாயக்குக்கு அந்த எண்ணம் தோன்றியது. தனியொரு மனிதனாக களமிறங்கினார். ‘சாதிக்க துணிந்தால், சமுத்திரமும் கால் மட்டம்’ அல்லவா? 2010ம் ஆண்டு தனது முயற்சியை தொடங்கினார் நாயக். இதற்கு, இவர் நம்பியது மனிதர்களையோ, இயந்திரங்களையோ இல்லை. ஒரே ஒரு கடப்பாரை, ஒரு மண்வெட்டி, ஒரு கூடை மட்டும்தான். தினமும் தன்னால் முடிந்தவரை மலையை குடைந்து கால்வாய் வெட்டத் தொடங்கினார். 3 ஆண்டு இடைவிடாத முயற்சிக்குப் பிறகு 2013ல் நினைத்ததை சாதித்தார். 3 கிமீ தூரத்துக்கு நீண்ட கால்வாயை உருவாக்கினார். அதன் மூலமாக இவரது கிராமத்துக்கு தண்ணீர் வந்தது. காய்ந்து கிடந்த 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்றன. இதற்காக, நாயக்குக்கு பெரிதாக எந்த வெகுமதியும் கிடைக்கவில்லை. ஆனால், இவர் செய்த சாதனை மட்டும் அரசின் காதுக்கு எட்டியது. அதை பாராட்டி வழங்கப்பட்டதுதான் பத்ம விருது. அதை நினைத்து நாய்க் பெருமைப்பட்டார். தனக்கு கிடைத்த இந்த அங்கீகாரத்தின் மூலம் தனது நிலையும், தனது கிராமத்தின் நிலையும் முற்றிலும் மாறும் என கனவு கண்டார். கிராமத்துக்கு நல்ல சாலை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும் என நம்பினார். அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில், சில மாநில அரசியல் தலைவர்களும் அவருக்கு கான்கிரீட் வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்தனர். அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி விட்டு சென்றனர். ஆனால், இதுவரை அவருக்கு யாரும் எந்த உதவியும் செய்யவில்லை.

விருது கிடைத்ததால் வாழ்க்கை மாறும் என நினைத்த நாயக்குக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், வேலை கூட கிடைக்காமல் வறுமையின் கொடுமைக்கு நாயக் தள்ளப்பட்டு இருக்கிறார். விரக்தி அடைந்த அவர், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விருதை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவரது நிலை குறித்து பல்வேறு ஊடகங்களும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளன. இதை பார்த்த மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் தாக்ரே, ‘‘நாயக்குக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். அவர் தனது விருதை அரசிடம் திருப்பித் தரக்கூடாது,’’ என்று அறிவித்தார். ஆனால். அது பேச்சு பேச்சாகவே இருக்கிறது. நாயகன் நாயக் நாறி கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு உயிர் கொடுத்து கொண்டிருப்பது எறும்பு முட்டைகள்தான். அதுதான் அவருக்கு இப்போது உணவாக இருக்கிறது. இது பற்றி நாயக் கூறுகையில், ‘‘வேலை இல்லாததால் வருமானம் இல்லை. வருமானம் இல்லாமல் உணவுக்கு எங்கே செல்வேன்? அவ்வப்போது தையல் இலை, மாங்காய் வற்றலை விற்று பிழைப்பு நடத்தி வருகிறேன்.ஆனால், அவை நிரந்தரம் இல்லை. தற்போது, உண்பதற்கு ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லை. எறும்பு முட்டைகளை தின்றுதான் உயிர் வாழ்கிறேன்,” என்கிறார் வேதனையுடன்.

‘விருதே ஒரு சாபமானது’

பத்ம் விருது பற்றி நாயக் கூறுகையில், “விருது பெறும் முன்பாக கிராமத்தில் ஆங்காங்கே கூலி வேலை கிடைத்தது.  அதை கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தேன். விருது பெற்றதில் இருந்து எனக்கு கூலி வேலை தருவதற்கு கூட யாரும் முன்வரவில்லை. கூலி வேலை கொடுத்தால் எனது மரியாதைக்கு இழுக்காகும் என்று நினைக்கின்றனர். அந்த விருது எனக்கு ஒரு சாபமாகி விட்டது,” என்றார்.

எறும்பு முட்டை எப்படி இருக்கும்?

கட்டெறும்புகள் உருவத்தில் சற்று பெரியதாக இருக்கும். இவற்றின் முட்டைகள் வெள்ளை நிறத்தில் நீள்வட்ட வடிவத்தில், எறும்புகள் கூடுகள் கட்டும் இடத்தில்  குவியலாக இருக்கும். பார்ப்பதற்கு அரிசி பொரி போன்றே ேதாற்றமளிக்கும். தென்கிழக்கு ஆசியா முழுவதிலும் குறிப்பாக லாவோஸ், வடகிழக்கு தாய்லாந்தின் பெரும்பாலான பகுதிகளில் எறும்பு முட்டைகளும், அவற்றின் கூட்டுப்புழுவும் சேகரிக்கப்பட்டு உணவாக பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் அதிகளவில்  புரத சத்து  உள்ளது. கொழுப்பு சத்து மிகமிக குறைவு என்பதால், தாய்லாந்து நாட்டு உணவு வகைகளில் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.

Related Stories: