பல்லாவரம், குன்றத்தூர், தாம்பரம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

„* நிம்மதி இழக்கும் வாகன ஓட்டிகள் * நிரந்தர தீர்வுக் காண வலியுறுத்தல்

பல்லாவரம்: சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், குன்றத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி இழந்து  வருகின்றனர். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மக்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால் காற்றும் மாசு அடைந்து வருகிறது. ஏற்கனவே சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து  ஆடும் நிலையில் சுவாசிக்க சுத்தமான காற்றும் இல்லாத சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சமூகநல ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உலக நாடுகள் தற்போது விழித்துக்கொண்டு புவி வெப்பமயமாதலில் இருந்து தங்களது நாட்டு மக்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை  எடுத்து வரும் இந்த வேளையில் இந்தியாவில் மட்டும் எந்த ஒரு சுய சிந்தனையும் இன்றி மத்திய,  மாநில அரசுகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றன. புகையுடன் சேர்த்து ஆயிலும் வெளியேறும் டூ ஸ்டோக் பைக் மற்றும் ஆட்டோக்களால் தான் அதிகமாக காற்று மாசுபாடு அடைந்துள்ளது. ஓசோன் படலம் ஓட்டை விழுந்தது என்று கூறி, பல நாடுகளில் டூ ஸ்டோக் வாகனங்கள் பயன்படுத்த  தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 20 ஆண்டுகளை கடந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களும் பயன்படுத்த வெளிநாடுகள் பலவற்றில் தடை உள்ளது. மாறாக இந்தியாவில் குறிப்பாக நமது சென்னையில் தற்போது வரை டூ ஸ்டோக் ஆட்டோக்கள்  சாலையில் இன்றும் ஹாயாக வலம் வருவதை காண முடிகிறது. இதே நிலைதான் அதிக புகையை கக்கி செல்லும் லாரி, பஸ், கார் போன்ற வாகனங்கள் 20 ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை உலா வருகின்றன. போக்குவரத்து போலீசார் பிடித்தாலும் லஞ்சம் கொடுத்து தப்பி விடலாம் என்ற எண்ணம்  இருப்பதாலேயே வாகன ஓட்டிகளும் தொடர்ந்து இதே தவறை செய்கின்றனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள் முதல் போக்குவரத்து காவலர்கள் வரை அனைவரும் லஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு இதுபோன்ற வாகனங்கள் ஓடுவதை கண்டும் காணாதது போல் உள்ளதாக மக்கள் மத்தியில் குற்றச்சாட்டு  எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதியில் தினமும் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது நிம்மதியை இழந்து வருகின்றனர். சாலை விரிவாக்கம் ஒன்று மட்டுமே  போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வாக அமையாது. மாறாக வர்த்தகம் தவிர்த்து தனி நபர் ஒருவருக்கு ஒரு வாகனம் மட்டும் என்றும், 20 வருடத்திற்கு மேற்பட்ட காலாவதியான வாகனங்கள் சாலையில் ஓட அனுமதியில்லை என்பது போன்ற கடுமையான சட்ட திட்டங்களை கொண்டு வந்தால்  மட்டுமே வரும் காலங்களில் சென்னை நகரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நகரமாக மாறும். இதனை கருத்தில் கொண்டு வாகனங்கள் விஷயத்தில் மத்திய, மாநில  அரசுகள் வருவாயை மட்டும் பார்க்காமல், நமது எதிர்கால சந்ததியின் நலனை கருத்தில் கொண்டு கடுமையான சட்ட திட்டங்களை இயற்றி போக்குவரத்து நெரிசலுக்கு  நிரந்தர தீர்வு காண வேண்டும்’’ என்றனர்.

Tags : Pallavaram, Kundathoor ,Tambaram ,traffic congestion
× RELATED போக்குவரத்து தடை செய்து 3...