×

சென்னை மத்திய சிறையில் நடந்த வெல்டிங் குமார் கொலையில் 2 பேருக்கு ஆயுள்: திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்தவர் வெல்டிங் குமார் (48). இவரது முதல் மனைவி சாந்தி (40). இவருக்கு சுஷில் குமார் (23) என்ற மகனும், திவ்யா (20) என்ற மகளும் உள்ளனர். வெல்டிங் குமாரின் இரண்டாவது மனைவி  சிவகாமி (30). இவருக்கு ஆனந்தி (8) என்ற மகளும், அப்பு (4) என்ற மகனும் உள்ளனர்.கேபிள் டிவி நடத்திய வெல்டிங் குமாருக்கு கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், போதை பொருள் கடத்தல் மற்றும் 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தொடர்பு இருந்ததாக கூறபடுகிறது.
இரு வேறு கொலை வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு வெல்டிங் குமார் சென்னை புழல் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு தண்டனை  கைதிகளுக்கான தனி சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.இந்நிலையில் கடந்த 10.6.2009 அன்று சிறையில் உள்ள மற்றொரு தண்டனை கைதி நேரு என்பவருடன் வெல்டிங் குமார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எண்ணூரை சேர்ந்த தண்டனை கைதி அன்பு (35) அங்கு வந்து வெல்டிங் குமாருக்கு  எதிரில் நின்று சிகரெட் பிடித்தார்.

அப்போது, ‘அண்ணன் எதிரில் நின்று சிகரெட் பிடிக்கிறாயா’ என சக கைதி நேரு அவரை தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும்  தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.இதனால் ஆத்திரம் அடைந்த வெல்டிங் குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்புவை குத்த முயன்றார். அதற்குள் அன்புவின் ஆதரவாளர்களான எண்ணூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் கார்மேகம் (27), ராஜா (35) ஓடி வந்து  வெல்டிங் குமாரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து புழல் சிறை போலீசார் வழக்குப்பதிந்து சிறை கைதிகள் அன்பு, ராஜா என்ற மெண்டல் ராஜா, கார்மேகம், பழனி, கார்த்திக், சுந்தரம் என்ற பல்லு சுந்தரம், கத்தி என்ற கதிர்வேல், ரமேஷ் என்ற ஹயிட் ரமேஷ் ஆகிய 8 பேரை கைது  செய்தனர். இதில், இரண்டாவது குற்றவாளியான ராஜா என்ற மெண்டல் ராஜா இறந்துவிட்டார். அன்பு, கார்மேகம் தவிர மற்றவர்கள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் வி.ஆர்.ராம்குமார் ஆஜராகி வாதாடினார். வழக்கு விசாரணை முடிந்து நேற்று நீதிபதி டி.செல்வநாதன் தீர்ப்பு அளித்தார். அதில்,  ‘புழல் மத்திய சிறைக்குள் தண்டனை கைதி வெல்டிங் குமாரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகள் அன்பு, கார்மேகம் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், ₹1,000 அபராதமும் விதிக்கப்படுகிறது’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதையடுத்து போலீசார் இருவரையும் பலத்த  பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.

அடுக்கடுக்கான வழக்குகள்
ஒரு காலத்தில் சென்னையையே கலக்கியவர் ரவுடி வெல்டிங்குமார். வெல்டிங் கடையில் வேலை பார்த்ததால் வெல்டிங் குமார் ஆகிவிட்டார். அரசியல்வாதிகளின் கூலிப்படை தலைவனாக திகழ்ந்தார். திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம்,  ஏழுகிணறு ஆகிய போலீஸ் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது உள்ளன. 1985ம் ஆண்டு திருவொற்றியூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு 1997ல் ஆயுள் தண்டனை கிடைத்தது.1992ல் ஏழுகிணறில் லம்பா மணி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 1999ல் இன்னொரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. எஸ்பிளனேடு போலீசார் இவர் மீது பதிவு செய்த கொலை முயற்சி வழக்கில் இவருக்கு 7 ஆண்டு சிறை  தண்டனை கிடைத்தது.

ராயபுரத்தில் நடந்த கொலை வழக்கில் இவர் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்தமாக இரட்டை ஆயுள் தண்டனையை இவர் அனுபவித்து வந்தார். ஜெயலலிதாவுக்கு எதிராக டான்சி வழக்கு தொடர்ந்த வக்கீல்  சண்முகசுந்தரம் தாக்கப்பட்ட வழக்கிலும், வழக்கறிஞர் விஜயன் தாக்கப்பட்ட வழக்கிலும் வெல்டிங்குமாருக்கு தொடர்புண்டு. இந்த வழக்குகளில் சிபிஐ கைது செய்து தண்டனை வாங்கி தந்தது. வாழ்நாளில் பெரும் பகுதியை சிறை பறவையாகவே கழித்துவிட்ட வெல்டிங்குமார் தனது நண்பர்களிடம் சிறையிலேயே எனது வாழ்க்கை முடிந்துவிடும் என விளையாட்டாக சொல்லியதாகவும் கூறப்படுகிறது. கொலை வழக்கில் சிறைக்கு  போன இவர் ஜெயிலுக்குள்ளேயே கொலை செய்யப்பட்டார்.



Tags : Madras Central, Welding Kumar, murder
× RELATED கொரோனா பரவல் எதிரொலி; முத்துப்பேட்டை...