வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி ஐஏஎஸ்களிடம் காரியம் சாதித்த போலி ஐபிஎஸ் அதிரடி கைது: எம்பிஏ படித்து வேலையில்லாமல் சுற்றியவரின் சொகுசு வாழ்க்கை அம்பலம்

சென்னை: பல ஐஏஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு, தான் ஐபிஎஸ் அதிகாரி என கூறி பல காரியங்களை சாதித்துக்கொண்ட வாலிபரை சென்னையில் போலீசார் கைது செய்தனர்.தமிழக சிவில் சப்ளை சிஐடி மேலாண் இயக்குநராக பெண் ஐஏஎஸ் அதிகாரி மதுமிதா பணியாற்றி வருகிறார். இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு, ‘நான் 2002ம் ஆண்டு பெங்களூரு கேடரில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி பணியாற்றி வரும்  பிரதீப்’ என்று ஒருவர் கடந்த 4 மாதங்களாக தகவல்களை அனுப்பி வந்துள்ளார். அந்த வகையில், கடந்த 25ம் தேதி மீண்டும் வாட்ஸ் அப்பில் தகவல் ஒன்று வந்தது. அதில், ரேஷன் கார்டு தொடர்பாக ஆன்லைனில் புகார் அளித்து 5  மாதமாகியும், சரியான நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து மிரட்டல் தொனியில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.இதை பார்த்த ஐஏஎஸ் பெண் அதிகாரி மதுமிதா சந்தேகமடைந்தார். பின்னர் சம்பவம் குறித்து சென்னை சிவில் சப்ளை சிஐடி கண்காணிப்பாளர் வருணிடம் தகவல் தெரிவித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்படி, வருண் விசாரணை  நடத்தினார். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

சென்னை சாலிகிராமம் எஸ்.பி.ஐ. காலனியை ேசர்ந்த பிரதீப் (30) என்றும், எம்பிஏ படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றி வந்ததால் போலி ஐபிஎஸ் அதிகாரி போல் மோசடி செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. பிரதீப் தான் 2002ம்  ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வாகி பெங்களூரில் வேலை செய்து வருவதாக 4க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு, அவருக்கு தேவையான காரியங்களை  முடித்துக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் அம்பலமானது. ஐஏஎஸ் அதிகாரிகளும், ஐபிஎஸ் அதிகாரி தானே உதவி கேட்கிறார் என்ற நல்ல நோக்கத்துடன் அவர் கேட்ட அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்துள்ளனர்.இதை தொடர்ந்து போலி ஐபிஎஸ் அதிகாரியான பிரதீப்பை சிவில் சப்ளை சிஐடி கண்காணிப்பாளர் வருண் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதன்படி போலீசார் கைது செய்து பிரதீப்பிடம் ரகசியமாக விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தொடர்ந்து நடித்து வருவதால் அவரை மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.சென்னையில் போலி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் நான்குக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளையே ஏமாற்றி காரியத்தை முடித்து வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: