×

செம்மஞ்சேரி, துரைப்பாக்கம் பகுதிகளில் மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பு: ஆட்டோ டிரைவர் சிக்கினார்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வயதான மூதாட்டிகளை குறிவைத்து ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் அவர்களிடம் சென்று ‘‘அருகில் உள்ள சேட்டு வீட்டில்  கிரஹபிரவேசம் நடைபெறுகிறது. வயதான நீங்கள் வந்து அவர்களை ஆசீர்வதித்தால் ₹1000 தருவார்கள்’’ என ஆசை வார்த்தை கூறி ஆட்டோவில் அழைத்து சென்று தங்க நகை அணிந்து இருந்தால் ‘‘சேட்டு வீட்டில் பணம் தரமாட்டார்கள்” என  கூறி அவற்றை வாங்கி கொண்டு ஆட்டோவில் இருந்து பாதியில் இறக்கிவிட்டு சென்றதாக புகார்கள் வந்தன.இதுகுறித்து அடையார் துணை ஆணையர் உத்தரவின்பேரில் துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் லோகநாதன் பரிந்துரையின்படி செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் சிவக்குமார் தலைமையில் தலைமை காவலர்கள் தாமோதரன், புஷ்பராஜ்,  முதல்நிலை காவலர் வெங்கடேஸ்வரன், காவலர் கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியை சேர்ந்த சுந்தர் (30) என்பவரை கைது செய்தனர்.

„ தூத்துக்குடியை சேர்ந்தவர் நசித் அலி (32). அண்ணா நகர், மேற்கு 2வது அவென்யூவில் உள்ள நகைக்கடை ஊழியர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து சென்றபோது அவரை தாக்கி செல்போன் பறித்த கொரட்டூர் புருஷோத்தமன் (21)  என்பவரை பொதுமக்கள் பிடித்து திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். „ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் குடிபோதையில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். இதை தட்டிக்கேட்ட ஆயிரம் விளக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்  சேகருக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்தார். விசாரணையில் ஆயிரம் விளக்கு அழகி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சூர்யமூர்த்தி (21) என தெரிந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்தனர்.

„பூந்தமல்லியில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற பஸ்சின் டிரைவர் சுரேஷ் (36), கண்டக்டர் பிரசாத் (42) ஆகியோரை தாக்கிய புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த தனபால் (23), நாகூரார் தோட்டத்தை சேர்ந்த  சதீஷ்குமார் (22) ஆகியோரை காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் கைது செய்தனர்.„அண்ணா நகர் சாந்தி காலனியில் ஜெராக்ஸ் கடை நடத்தும் சூளைமேடு விஜய் (35) என்பவர் பெண்களை கேலி செய்ததாக அமைந்தகரை போலீசார் கைது செய்தனர். „ பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த தருண்குமார் என்பவரது நகைக்கடையில் ₹5 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடியதாக வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்த பாரதி, ஜோலார்பேட்டை சேர்ந்த  அலமேலு ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

3 பேருக்கு அரிவாள் வெட்டு
எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பிரபல ரவுடி பாண்டியன் (32). கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பாக திருவொற்றியூர் சின்ன மேட்டு பாளையத்தை சேர்ந்த யாதவ சங்க தலைவர் பாண்டியமணி, மாட்டு மந்தை தெருவை சேர்ந்த  கேட்சுப்பிரமணி ஆகியோரை கொலை செய்த வழக்கில் பாண்டியன் முக்கிய குற்றவாளி. இந்நிலையில்  சுப்ரமணியனின் உறவினரான திருவொற்றியூர்  பகுதியை சேர்ந்த கங்காதரன் தனது கூட்டாளிகள் மோகன், மோகன்ராஜ், அருண்ராஜ்,  பிரபாகரன், சரண் ஆகியோருடன் சேர்ந்து கடந்த 21ம் தேதி பாண்டியனை வெட்டி கொலை செய்தனர். இது சம்பந்தமாக  எண்ணூர் போலீசார்  வழக்கு பதிவு செய்து இந்த ஆறு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கங்காதரனின் சகோதரரான முருகன்( 24) என்பவர் நேற்றுமுன்தினம் இரவு எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள தனது வீட்டிற்கு தனது நண்பர்கள் சிலருடன் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கொலை செய்யப்பட்ட  பாண்டியனின் மைத்துனரான  தமிழ் (27 )மற்றும் அவனது கூட்டாளி ஆகாஷ் (25) ஆகியோர் முருகனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். இதில் முருகன் மற்றும் அவரது நண்பர்களான வினோத் (30) ஹரிகரன் (28) ஆகியோருக்கு பலத்த  வெட்டுக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து  எண்ணூர் போலீசார் வந்து முருகன், வினோத், ஹரிகரன் ஆகியோரை சிகிச்சைக்காக  ஸ்டான்லி மருத்துவமனையில்  சேர்த்தனர். இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து தமிழ், ஆகாஷ், பல்லு சூரியா  (19), வில்வேந்திரன் (18), டில்லிபாபு (21) ஆகிய 5 பேரை எண்ணூர் போலீசார் கைது செய்தனர்.



Tags : Shempanchery, Duraipakkam , Auto driver ,
× RELATED சாலையோர துரித உணவகங்களில்...