சிங்கப்பூரில் இருந்து லண்டன் சென்ற விமானத்தில் பெண் பயணிக்கு திடீர் நெஞ்சுவலி: சென்னையில் தரையிறக்கி சிகிச்சை

மீனம்பாக்கம்: சிங்கப்பூரில் இருந்து  லண்டன் செல்லும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம்  327 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.  நேற்று அதிகாலை  1.30 மணி அளவில்  சென்னை வான்வெளியில் நடுவானில் சென்று  கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணம் செய்த  பிரிட்டீஷ் நாட்டை சேர்ந்த ரோனா கிளாமென் (77)  என்ற பெண்ணுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பணிப்பெண்கள் அவசர அவசரமாக விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனே விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தரையிறங்க  அனுமதி கேட்டார். இதையடுத்து தலைமை கட்டுப்பாட்டு அறையில் இருந்த அதிகாரிகள் உடனடியாக பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தை  தரையிறங்க அனுமதி வழங்கியதோடு பாதிக்கப்பட்ட பயணிக்கு  அனைத்து விதமாக மருத்துவ உதவிகளையும் அளிக்க உத்தரவு பிறப்பித்தார்.

இதையடுத்து விமானம் அதிகாலை 1.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. ஓடுபாதை அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் உடனடியாக விமானத்தில் ஏறி பெண் பயணி  ரோனாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அவரை உடனடியாக மருத்துவமனையில் உள்நோயாளியாக  சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்தனர். ஆனால், அவர் பிரிட்டீஷ்  நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்பதும், சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு சென்று கொண்டிருக்கும் அவரிடம்  

இந்தியாவில் இறங்குவதற்கு விசா இல்லை என்பதும் தெரிந்தது.இதையடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து மருத்துவ சிகிச்சைக்கான அவசரகால விசாவை வழங்கினர். அதன் பின்பு அந்த பெண் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது உடல் நிலை தேறி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மீதம் இருந்த 326 பயணிகளுடன் விமானம் அதிகாலை  4.30 மணிக்கு லண்டன் புறப்பட்டு  சென்றது.

Related Stories: