காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு காவல் நிலையத்தில் தம்பதி தஞ்சம்: பாதுகாப்பு வழங்க கோரிக்கை

திருவொற்றியூர்: எண்ணூர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரி புதுமண தம்பதி தஞ்சம் அடைந்தனர். எண்ணூர் அருகே  எர்ணாவூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் விஜி (23). எலக்ட்ரீஷியன். இவரும், பாரதியார் நகரை சேர்ந்த லூப்னா (19) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள்  என்பதால் இவர்கள் காதலுக்கு லூப்னா வீட்டில் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் உதவியுடன் எர்ணாவூரில் உள்ள கருமாரியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்துக்கு லூப்னாவின் பெற்றோர்  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி எண்ணூர் காவல் நிலையத்தில்  தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து இரு வீட்டாரையும் அழைத்து எண்ணூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்  புகழேந்தி விசாரணை நடத்தினார். போலீஸ் விசாரணையின்போது லூப்னா காதல் கணவர் விஜியுடன் தான் செல்வேன் என உறுதியாக கூறியதை அடுத்து காவல் துறையினர் வாழ்த்து கூறி விஜியுடன், லூப்னாவை அனுப்பி வைத்தனர். மேலும், இருவருக்கும் எந்தவித  இடையூறும் செய்யக்கூடாது என பெற்றோரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.  

Related Stories: