சான்றிதழ்களில் வழங்கியதாக சீல் வைத்துவிட்டு இலவச லேப்டாப்களை விற்க முயற்சி

* மாணவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
* தலைமை ஆசிரியரிடம் வாக்குவாதம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் அரசு பள்ளியில் சான்றிதழ்களில் வழங்கியதாக சீல் வைத்து இலவச லேப் டாப்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது.
பல்லாவரம்-குன்றத்தூர் பிரதான சாலையில் அனகாபுத்தூரில் அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017-2018ம் ஆண்டு கல்வி பயின்ற பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு அரசின் இலவச லேப் டாப்கள் தற்போது வரையிலும் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு வழங்குவதற்காக கொண்டு வந்த 100க்கும் மேற்பட்ட லேப்டாப் மாணவர்களுக்கு கொடுக்கப்படாமல் அனைத்தும் கள்ளச்சந்தையில் பள்ளி நிர்வாகம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ‘‘எங்களுக்கான இலவச லேப்டாப்களை தராமல் எப்படி ஏமாற்றலாம்?’’ என்று தலைமை ஆசிரியரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பள்ளி தலைமை ஆசிரியர், ‘‘மாவட்ட கல்வி அதிகாரி கொடுக்க சொன்னால் மட்டுமே எங்களால் லேப்டாப் கொடுக்க முடியும். அதுவரை உங்களுக்கு லேப்டாப் கொடுக்க முடியாது. மரியாதையாக ஓடி விடுங்கள். இல்லை என்றால்  நடப்பதே வேறு’’ என மாணவர்களை மிரட்டியுள்ளார்.

தகவலறிந்து சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை ஏற்று மாணவர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கு வழங்க வேண்டிய இலவச லேப்டாப்களை தராமல் தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இணைந்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 100க்கும் மேற்பட்ட லேப்டாப் பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டு இருப்பதை அறிந்து நாங்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு கேட்டோம். ஆனால் தலைமை ஆசிரியர் எங்களை முன்னாள் மாணவர்கள் என்றும் பாராமல் திட்டியதுடன்,  பள்ளியில் வேலை செய்து வரும் துப்புரவு தொழிலாளர்களை வைத்து எங்களை ஆபாசமாக திட்டி, அடித்து விரட்ட பார்க்கிறார். மேலும் எங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளி மதிப்பெண் சான்றிதழின் பின் பகுதியில் எங்கள் அனைவருக்கும் அரசின்  இலவச லேப்டாப் வழங்கப்பட்டுள்ளதாக எழுதப்பட்டுள்ளது.
இதனால் மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் லேப்டாப்களை பெரிய அளவில் ஊழல் செய்ய பள்ளி நிர்வாகம் முயற்சித்து வருகிறதோ என எண்ண தோன்றுகிறது. உடனே இந்த விவகாரத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் தலையிட்டு  எங்களுக்கு இலவச லேப்டாப்களை கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : sealed,certificates, sell ,free laptops
× RELATED இலவச மருத்துவ முகாம்