கடனுக்கு சொத்தை அபகரிக்க பைனான்சியர் முயற்சி ஓட்டல் உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று மதியம் கையில் பையுடன் ஒருவர் வந்தார். மூன்றாவது கேட் அருகே வந்தபோது திடீரென மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே  போலீசார் பாய்ந்து வந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்டனர்.தகவலறிந்து வேப்பேரி போலீசார் வந்து அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். விசாரணையில் தெரிய வந்ததாவது: நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையை சேர்ந்தவர் தங்கராஜ் (56). தங்க மயில் என்ற பெயரில் ஓட்டல்  நடத்துகிறார். கடை வளர்ச்சிக்காக கடந்த 2017ம் ஆண்டு அசோக் நகரில் பைனான்ஸ் நடத்தி வரும் கண்ணன் என்பவரிடம் ₹4.50 லட்சம் பணம் கந்து வட்டிக்கு பெற்றார். வாங்கிய கடனை சரியாக கட்ட முடியாததால் தனக்கு தர வேண்டிய பணத்திற்கு சில காலம் கடையை கண்ணன் நடத்த விட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது ஒவ்வொரு மாதமும் கண்ணன் கடன் வாங்கிய ஓட்டல் உரிமையாளர்  தங்கராஜிக்கு ₹10 ஆயிரம் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் சொன்னப்படி கண்ணன் பணம் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே தங்கராஜ் வங்கியில் லோன் மூலம் வாங்கி ஓட்டலில் வைத்திருந்த ₹1.50 கோடி மதிப்புள்ள பொருட்களை பெற்ற கடனுக்காக லாரி மூலம் ஏற்ற செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் தங்கராஜ் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதையடுத்து கந்து வட்டிக்கு கடன் கொடுத்த கண்ணனிடம் இருந்து ₹1.50 கோடி மதிப்புள்ள பொருட்களை மீட்டு  தர வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிவந்தது.இதைதொடர்ந்து தங்கராஜிடம் வேப்பேரி போலீசார் புகாரை பெற்று கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: