வரும் 28ம்தேதி நடக்கும் கிராமசபை கூட்டத்தில் காங்கிரசார் திரளாக பங்கேற்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி வேண்டுகோள்

சென்னை: அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 28ம்தேதி நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் காங்கிரசார் திரளாக பங்கேற்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:    காங்கிரஸ் ெகாண்டு வந்த, ராஜீவ்காந்தி கண்ட கனவான மக்களுக்கே அதிகாரம் அளிக்கும் பஞ்சாயத்துராஜ் மசோதா சட்டமாக்கப்பட்டு 26 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் தற்போது பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஆய்வு செய்தால் கடும் அதிர்ச்சியும், வேதனையும் தான் ஏற்படுகிறது.   பஞ்சாயத்து அமைப்புகளை செயல்படாமல் தடுக்கிற வகையில் அதிமுக அரசு உரிய நிதியை ஒதுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்தச் சூழலில் கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி நடத்தப்பட வேண்டிய கிராமசபை கூட்டம் மக்களவை தேர்தலுக்கான நடத்தை விதிமுறைகளின் காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.

 ஒத்தி வைக்கப்பட்ட கிராமசபை கூட்டத்திற்கான மாற்று தேதியாக வரும் 28ம்தேதி அனைத்து ஊராட்சிகளிலும் காலை 11 மணிக்கு நடத்தப்பட வேண்டுமென தமிழக ஊரக வளர்ச்சித்துறை அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளதால், அதற்கான ஆயத்தப் பணிகளில் காங்கிரஸ் கட்சி தீவிரம் காட்டி வருகிறது.   முதற்கட்டமாக கடந்த ஜூன் 21ம் தேதி மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம். அந்தக் கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, கட்சியின் சின்னம் இல்லாமல் போட்டியிட வாய்ப்புள்ள ஊராட்சி மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.

 தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சிகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிட தீவிரம் காட்ட வேண்டுமென மாவட்ட தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். எனவே, இந்தப் பின்னணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து  ஊராட்சிகளிலும் வரும் 28ம்தேதி நடைபெறுகிற கிராமசபை கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பெருமளவில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: