நீர்நிலை ஆக்கிரமிப்பை ஆரம்பத்திலேயே அகற்ற வேண்டும்: சர்வேயர்களுக்கு அமைச்சர் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஏரி, குளம், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நில அளவை துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

வருவாய் துறை சார்பில் அறிவிக்கப்பட உள்ள புதிய அறிவிப்புகள், நில அளவை துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, நில அளவை துறை இயக்குநர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 32 வருவாய் மாவட்டத்தை சேர்ந்த நில அளவை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வு கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: நீர் மேலாண்மை பொறுத்தவரை ஏரி, குளம், நீர்நிலைகளில் நிலங்களின் அளவீடுகள் சரியாக பராமரிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அதனை ஆரம்பித்திலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக முதல்வர் தலைமையில் கடந்த வாரம் ஆலோசனை நடைபெற்று, போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, இந்த நிதியின் மூலம் ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர் எடுத்து லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய மேலும் 200 கோடி ரூபாய் முதல்வர் வழங்க உத்தரவிட்டுள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: