போதையில் வாலிபர் போலீசாரை தாக்கும் விவகாரம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் சி.வி.சண்முகம் போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை: சென்னை நீலாங்கரையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்தி போலீசாரை தாக்கிய நபர் தனது மகன் என, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அமைச்சர் சி.வி.சண்மூகம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை நீலாங்கரையில் கடந்த 24ம் தேதி இளம் தொழிலதிபர் நவீன் என்பவர் மது போதையில் காரால் விபத்தை ஏற்படுத்திவிட்டு போலீசாரை தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் போலீசாரை தாக்கும் நபர் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மகன் என்று சிலர் பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

இதையடுத்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் அவரது வழக்கறிஞர் பாலா என்பவர் நேற்று போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.  அந்த புகாரில், தனது பெயருக்கும், மகனின் பெயருக்கும் களங்கப்படுத்தும் விதமாக சிலர் விஷமத்தனமாக வேண்டும் என்றே சமூக வலைத்தளங்களில் அவதூறு பதிவுகளை செய்து வருகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் உள்ள வீடியோவை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: