சேப்பாக்கம் பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு போலி பணிநியமன ஆணையுடன் வந்த வாலிபர்

*  ஊழியர்கள் அதிர்ச்சி

* இடைத்தரகரிடம் 3 லட்சம் ஏமாந்தது அம்பலம்

சென்னை: பொதுப் பணித்துறையில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி போலி பணி நியமன ஆணையுடன் வந்தவரால் சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. இந்த துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த துறை என்பதால் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு எழுதியவர்கள் பலர் பொதுப்பணித்துறையை தேர்ந்தெடுப்பது வழக்கம். இதனால், இந்த துறையில் காலி பணியிடங்கள் அதிகரித்துக்கொண்டே வந்தாலும் ஒருபுறம் டிஎன்பிஎஸ்சி அந்த பணியிடங்களை நிரப்பும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.  தமிழக அரசின் போக்குவரத்து துறை, மின்வாரியம் உள்ளிட்ட ஒரு சில துறைகளில் மட்டுமே நேரடி நியமனம் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆனால், பொதுப்பணித்துறையில் டிஎன்பிஎஸ்சி மூலமே தகுதியான நபர்கள் இன்றளவும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுப்பணித்துறையில் நேரடி நியமனம் மூலம் ஊழியர்கள் எடுப்பதாக கூறி இடைத்தரகர்கள் சிலர் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், சமீபத்தில் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க ஒருவர் பணி நியமன ஆணையுடன் சேப்பாக்கம் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த ஊழியர்களிடம், ‘நான் பணி நியமன ஆணையுடன் வந்துள்ளேன். இங்கு யாரை சந்திப்பது என்று தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார். அங்கு இருந்த ஊழியர்கள், அவரிடம் இருந்த பணி நியமன ஆணையை வாங்கி பார்த்தனர். தமிழக அரசு முத்திரையிடப்பட்ட அந்த பணிநியமன ஆணையில் 30 ஆயிரம் ஊதியத்தில் பொதுப்பணித்துறையில் இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது என்றும், முதல்வரின் ஒப்புதலுடன் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும், தமிழ்நாடு அரசு செயலாளர் அன்பரசன் என்று பணி ஆணையில் குறிப்பிட்டிருந்ததை பார்த்து ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதை தொடர்ந்து  அங்கிருந்த ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் உயர் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்திய போது, பாதிக்கப்பட்ட நபர் இந்த பணியிடத்துக்கு ₹3 லட்சம் வரை இடைத்தரகர் ஒருவரிடம் கொடுத்து இருப்பது தெரிய வந்தது. இதேேபான்று, 3 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த உயர் அதிகாரி, இச்சம்பவம் தொடர்பாக அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில்புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories: