×

புதிய கல்விக் கொள்கை மீதான தமிழகத்தின் கருத்தை முதல்வர் பிரதமருக்கு தெரிவிப்பார்: செங்கோட்டையன் பேட்டி

சென்னை: மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை மீது தமிழக அரசின் கருத்தை இரண்டு நாட்களில் பிரதமருக்கு, கடிதம் மூலம் தமிழக முதல்வர் தெரிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் படிப்பவர்களுக்கு மடிக் கணினிகளை  தமிழக அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது. 2017-2018, 2018-2019 ஆகிய கல்வி ஆண்டுகளில் படித்து முடித்த மாணவ மாணவியருக்கு மடிக்கணினி வழங்க அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மா ணவர்களுக்கு முதற்கட்டமாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் படித்து முடித்த  மாணவர்களுக்கு 3 மாதங்களுக்கு உள்ளாக  மடிக்கணினிகள் வழங்கப்படும். தனியார் பள்ளிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதாக புகார் வந்துள்ளது.

அதன் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை  அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை மீது தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை நாளை அல்லது நாளை மறுநாளுக்குள்ளாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  கடிதம் மூலம் பிரதமருக்கு தெரிவிப்பார்.  புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சிடப்பட்டுள்ள புத்தகங்கள் ஒரு சில பள்ளிகளில் கிடைக்கவில்லை என்ற புகார் வந்தது. விரைவில் அந்த பள்ளிகளுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்கப்படும்.இந்த ஆண்டு அச்சிடப்பட்டுள்ள புத்தகங்களில் சிலவற்றில் சிறு சிறு குறபைாடுகள் இருப்பதாகவும், அவற்றை முழுமையாக திருத்தி அமைத்து அடுத்த ஆண்டு முதல் தவறுகள் இல்லாமல் அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


Tags : New Education Policy, Tamil Nadu, Red Fort
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்