கொள்கை இல்லாத கட்சியில் எனக்கு கொபசெ பதவி எதற்கு? டிடிவி மீது தங்கதமிழ்செல்வன் பாய்ச்சல்

சென்னை: ‘அமமுகவில் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு மதிப்பில்லை. ஒன்மேன் ஆர்மியாக செயல்படுகிறார். கொள்கை இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி எதற்கு’ என டி.டி.வி.தினகரன் மீது தங்கதமிழ்செல்வன் சரமாரியாக குற்றம் சுமத்தினார். அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன், அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குறித்து, ஆபாசமாக விமர்சனம் செய்து பேசியதாக கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப்களில் வைரலாக பரவியது. இதன் மூலம் இருவருக்கும் இடையேயான மோதல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அமமுகவில் இருந்து தங்கதமிழ்செல்வன் நீக்கப்படுவது உறுதியானது. ‘யாரையும் நீக்குவதில் எனக்கு அச்சம் கிடையாது’ என்று டி.டி.வி.தினகரனும் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், ‘என்னைப் பார்த்தால் தங்கதமிழ்செல்வன் பொட்டிப்பாம்பாக அடங்கி விடுவார்’ என்றும் அவர் வகித்து வரும் கொள்கை பரப்பு செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, புதிய கொள்கை பரப்பு செயலாளர் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில் நேற்று காலை மதுரை வந்த தங்கதமிழ்செல்வன், விமான நிலையத்தில் அளித்த பேட்டி:்டி.டி.வி.தினகரன் தொண்டர்கள், நிர்வாகிகள் உட்பட யாருடைய கருத்துகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. ‘பொட்டி பாம்பாக நான் அடங்கி விடுவேன்’ என்று அவர் கூறுகிறார். எதற்காக நான் பொட்டி பாம்பாக அடங்க வேண்டும்? இதற்கு என்ன அர்த்தம்? நான் என்ன அவரிடம் அடிமையாகவா வேலை பார்க்கிறேன். கொள்கையே இல்லாத கட்சிக்கு கொள்கை பரப்பு செயலாளர் எதற்கு என்பதுதான் எனது கேள்வி. அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும். அந்த இடத்தில் அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. இதை தவிர அமமுகவுக்கு கொள்கை என்று எதுவும் கிடையாது.

 என்னை யாரும் பின்னால் இருந்து இயக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் இப்போது அமைதியாகவும், மன நிறைவாகவும் இருக்கிறேன். எனது அடுத்த நடவடிக்கை குறித்து நேரம் வரும்போது சொல்கிறேன். யாரும் என்னிடம் பேசவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை. டி.டி.வி.தினகரன், தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட யாருடைய கருத்துக்களையும் ஏற்பதில்லை. ஒன் மேன் ஆர்மியாக டி.டிவி செயல்படுவதால், கட்சியில் உள்ளவர்கள் வெளியேறி வருகிறார்கள். அமமுக கூடாரம் கலையுமா என்பதை தொண்டர்கள்தான் முடிவு செய்வார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: