முரசொலி வளாகத்தில் ஆக. 7ல் கலைஞர் சிலை திறப்பு: தலைமை ஏற்று நடத்த கி.வீரமணிக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அழைப்பு

சென்னை: முரசொலி வளாகத்தில் ஆகஸ்ட் 7ம்தேதி நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு தலைமை ஏற்க கி.வீரமணியை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.   திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று பெரியார் திடலில் திராவிடர் கழக அலுவலகத்துக்கு வந்தார். அங்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். அப்போது பொதுவான பிரச்னைகள் குறித்து இருவரும் விவாதித்தனர். பிறகு சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞரின் உருவசிலை திறப்பு விழாவை தலைமையேற்று நடத்தி தருமாறு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை கேட்டுக் கொண்டார். அதற்கான அழைப்பிதழையும் மு.க.ஸ்டாலின் அவரிடம் வழங்கினார்.  இந்த சந்திப்புக்கு பின்னர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:   சென்னை முரசொலி அலுவலக வளாகத்தில் கலைஞரின் உருவச்சிலை ஆகஸ்ட் 7ம்தேதி திறக்கப்பட உள்ளது.

இந்த திறப்பு விழாவுக்கு தலைமை ஏற்று நடத்தி தர எனக்கு அழைப்பு விடுத்தார். எனது தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், கலைஞரின் உருவ சிலையை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன் முன்னிலை வகிக்கிறார்.  அதேபோன்று, ஆகஸ்ட் 27ம்தேதி சேலத்தில் நடக்க உள்ள திராவிடர் கழக பவள விழாவின் நிறைவு பேருரை ஆற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேட்டுக் கொண்டேன். அவரும் அதற்கு ஒப்புதல் தந்துள்ளார்.

மத்திய பாஜ அரசு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை ஏதாவது ஒரு வழியில் தமிழக மக்கள் மீது திணிக்க பார்க்கிறது. அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். தொடர்ந்து நாங்கள் எதிர்த்துக் கொண்டே இருப்போம்.  மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்க குறைந்தது 6 மாதமாவது அவகாசம் வேண்டும். 30 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்திருப்பது போதாது.  இவ்வாறு அவர் கூறினார்.  இந்த சந்திப்பின் போது, முன்னாள் அமைச்சர் பொன்முடி, திராவிடர் கழக துணை தலைவர் கலிபூங்குன்றன், வெளியுறவுத் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: