தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து ஆட்சேபணை தெரிவிக்காத 1 லட்சம் பெயர்கள் நீக்கம்: அசாமில் அதிரடி நடவடிக்கை

கவுகாத்தி: அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டில் இருந்து 1.02 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.  அசாமில் சட்ட விரோதமாக குடியேறுபவர்களை தடுக்கும் வகையில், கடந்த 1951ம் ஆண்டு முதல் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு மேம்படுத்தப்படுகிறது. இதில் தகுதியற்றவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு வருகிறது. இதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இது தொடர்பாக தேசிய குடிமக்கள் பதிவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தயாரிக்கப்படும் இந்த பட்டியலில் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டவர்கள், சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள், வெளிநாட்டு தீர்ப்பாயங்களில் சம்மந்தப்பட்ட நபர் மீது வழக்கு நிலுவையில் இருந்தால், அவர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தகுதியற்ற நபர்களாக கருதப்படும் 1.02 லட்சத்திற்கும் அதிகமானோரின் பெயர் உள்ளூர் குடிமக்கள் பதிவாளர்கள் நடத்திய ஆய்வின் அடிப்படையில், வரைவு தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி நேற்று வரை தங்களை நீக்கியது தொடர்பாக புகார் அளிக்காதவர்கள் அல்லது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நீக்கப்பட்டவர்கள் பெயர்கள் என்ஆர்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர,  கடிதம் மூலமும் சம்மந்தப்பட்ட நபர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ஆர்சி சேவா ேகந்திரா மற்றும் துணை ஆணையர் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களிலும் இந்த பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. தகுதியிருந்தும் தங்கள் பெயரை நீக்கியிருப்பதாக கருதினால் அவர்கள் வரும் 5ம் தேதி தொடங்கும் விசாரணையில் நேரில் பங்கேற்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்கள் பெயர்களை சேர்க்கலாம். இதன் இறுதி பட்டியல் அடுத்த மாதம் 31ம் தேதி வெளியிடப்படும்.  இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: