ராஜினாமா முடிவில் ராகுல் தொடர்ந்து உறுதி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். இதனால் தலைவர்களின் சமரச முயற்சி மீண்டும் தோல்வி அடைந்தது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால், அதற்கு கட்சித் தலைவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. அவரே தொடர்ந்து பதவியில் நீடிக்க வேண்டும், கட்சியில் தோல்விக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக, ராகுலின் தாய் சோனியா, சகோதரி பிரியங்கா உள்ளிட்டோரும், கட்சியின் மூத்த தலைவர்களும் ராகுலை சந்தித்து ராஜினாமா முடிவை திரும்ப பெற வலியுறுத்தினர். ஆனால், ராகுல் அதை ஏற்கவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி கலந்துக் கொண்டனர். அப்போது, ராகுல் தொடர்ந்து கட்சி தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என எம்பிக்கள் வலியுறுத்தினர். ஆனால் ராகுல் காந்தி தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, ராகுல் தொடர்ந்து தலைவராக நீடிக்க வேண்டும் என்று அவரது வீட்டின் முன்பு இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: