கேரளாவில் மேலும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி பா.ஜனதாவில் சேர திட்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் மேலும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி பா.ஜ.வில் சேர தீர்மானித்துள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரளாவில் உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு இருந்தபோது சட்டம்  ஒழுங்கு டிஜிபியாக இருந்தவர் சென்குமார். 2016ல் பினராய் விஜயன்  தலைமையிலான இடதுமுன்னணி அரசு ஆட்சிக்கு வந்த உடன் சென்குமார்  அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர்  உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பதவி ஓய்வு பெறும்வரை  அவரை அதே பணியில்  நியமிக்க உத்தரவிட்டது. இதை தொடர்ந்து அவர் மீண்டும் அதே பதவியில்  அமர்த்தப்பட்டார்.  ஆனால் அதன் பிறகு இடதுமுன்னணி அரசு அவருக்கு பல்வேறு இடையூறுகளை  கொடுத்தது. கடந்த 2017ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் அவர் பா.ஜ.வில் இணைந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.  வேட்பாளர்களுக்காக அவர் பிரசாரம் செய்தார். பா.ஜ. மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் சென்குமாருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த  நிலையில் மேலும் ஒரு ஐபிஎஸ் அதிகாரி பா.ஜவில் சேர திட்டமிட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் லஞ்ச ஒழிப்பு துறையில் கூடுதல்  டிஜிபியாக இருந்தவர் ஜேக்கப் தாமஸ். கேரளாவை ஓகி புயல் தாக்கியபோது கேரள அரசு  மீனவர்களுக்கு முறையாக உதவிகள் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். அரசு  பணியில் இருந்துகொண்டே அரசு மீது குற்றம் சுமத்தியதால் கடந்த 2017  டிசம்பரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  6 மாதம் வரை தான் சஸ்பெண்ட்  காலமாகும். இந்த நிலையில் அவர் சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.  அதில் அரசிற்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்.  இதையடுத்து மீண்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான காலாவதி முடிவடையும் நிலையில் இவர்  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் துறைமுக பொறுப்பு அதிகாரியாக இருந்தபோது  சில ெபாருட்கள் முறைகேடாக வாங்கியதாக குற்றம்சாட்டி மீண்டும் சஸ்பெண்ட்  செய்யப்பட்டார்.

தற்போது இவர் சஸ்பெண்டில் உள்ளார். இதற்கிடையே இவருக்கு  டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட இவர்  விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் கேரள அரசு அவருக்கு அனுமதி மறுத்தது.  இந்நிலையில் டிஜிபி ேஜக்கப் தாமஸ் கடந்த 2 நாட்களுக்கு முன் டெல்லி  சென்று சில ஆர்எஸ்எஸ் தலைவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்  பா.ஜ.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Related Stories: