பாஜ வெற்றியின் மீது சந்தேகத்தை கிளப்பி ஓட்டு போட்ட மக்களை அவமதிக்கிறது காங்.: மாநிலங்களவையில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று நடந்த ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: சில தலைவர்கள் பாஜ தலைமையிலான கூட்டணி வென்றதால், நாடு தோற்று விட்டதாகவும், ஜனநாயகம் தோற்று விட்டதாகவும் கூறுகிறார்கள். அப்படியென்றால் வயநாட்டிலும், ரேபரேலியிலும் இந்தியா தோற்று விட்டதா? இதுபோன்ற பேச்சுகள் துரதிருஷ்டவசமானவை. காங்கிரஸ் ஜெயிக்காவிட்டால், இந்தியாவே ஜெயிக்கவில்லை என்றாகிவிடுமா? இந்தியாவும், காங்கிரசும் ஒன்றா? நிச்சயம் இல்லை. இப்படி பேசுவதை விட ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் வேறெதுவும் இருக்க முடியாது. பாஜ.வின் வெற்றி மீது சந்தேகத்தை கிளப்பி, ஓட்டு போட்ட மக்களை காங்கிரஸ் அவமதிக்கிறது. விவசாயிகள் ₹2000க்காக தங்களை விற்று விட்டார்கள் என கூறி அவர்களை அவமானப்படுத்துகிறது. 17 மாநிலங்களில் காங்கிரசால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

Advertising
Advertising

சிலர் மின்னணு வாக்கு இயந்திரத்தைப் பற்றி அவையில் பேசுகிறார்கள். மின்னணு வாக்கு இயந்திரத்திற்கு அனுமதி அளித்ததே காங்கிரஸ்தான். மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் நடந்த பல தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால், இப்போது அவர்களின் தோல்விக்கு மின்னணு இயந்திரத்தின் மீது பழி சுமத்துகின்றனர். மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீது புகார் கூறுகிறவர்களுக்கு, தொழில்நுட்பம், டிஜிட்டல் பரிவர்த்தனை, ஆதார், ஜிஎஸ்டி, பீம் ஆப் என அனைத்திலும் பிரச்னை இருக்கிறது. இந்த எதிர்மறை எண்ணம்தான், சில கட்சிகள் மக்கள் நம்பிக்கையை பெற முடியாததற்கான மிக முக்கியமான காரணமாகும். 1950களில் தேர்தல் நடைமுறைகள் முடிய அதிக காலதாமதம் ஆனது. சில இடங்களில் வன்முறை, வாக்குச்சாவடியை கைப்பற்றுதல் போன்றவை வழக்கமானதாக இருந்தது. தேர்தல் நடந்தாலே எங்கெங்கு வன்முறை நடந்தது, எத்தனை பேர் பலியானார்கள், எத்தனை வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டன என்பதைப் பற்றி தான் அடுத்த நாள் தலைப்பு செய்திகள் இருக்கும். இவையெல்லாம் தற்போது பெருமளவு குறைந்து விட்டன. இது ஆரோக்கியமான முன்னேற்றம்.

பாஜ,வின் வெற்றியை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. அதேபோல், அவர்கள் அடைந்த தோல்வியையும் கையாளத் தெரியவில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. ஊடகங்களால்தான் பாஜ வென்றதாக கூறுகிறீர்கள், அப்படியென்றால் ஊடகங்கள் விலை போய்விட்டதாக கூறுகிறீர்களா? உங்களின் கணக்கு, தமிழகத்திலும், கேரளாவிலும் எடுபடுமா?  இதுபோல் எல்லாவற்றையும் குறை சொல்லும் காங்கிரஸ், இப்போது ‘புதிய இந்தியா’வையும் எதிர்க்கிறது. மீண்டும் பழைய இந்தியாவே வேண்டுமென நினைக்கிறீர்களா? அமைச்சரவை முடிவுகள், பத்திரிகையாளர் சந்திப்பில் கிழித்தெறியப்பட்ட அந்த பழைய இந்தியாதான் வேண்டுமா? கடற்படையை சொந்த பயணத்துக்கு பயன்படுத்திக் கொள்வது, ஊழலில் திளைப்பது, சிறுசிறு கும்பல்களின் அராஜகம் கொண்ட பழைய இந்தியாதான் வேண்டுமா?  அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அனுமதித்தது ராஜிவ் காந்தி அரசுதான். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக நியாயமான முறையில் என்சிஆர் பதிவேட்டை அமல்படுத்துவோம்.

ஜார்க்கண்டில் நடந்த கும்பல் கொலை மிகுந்த வேதனையை அளிக்கிறது. தனிநபர்கள் கும்பலால் கொல்லப்படுவதை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. அதுபோன்ற குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவோம்.  பீகாரில் மூளைக் காய்ச்சலால் குழந்தைகள் பலியான சம்பவம் துரதிஷ்டவசமானது. இதை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். மாநில அரசுடன் இணைந்து இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்போம்.  தற்போது நாட்டில் 226 மாவட்டங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வருகின்றன. அனைவரும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். எம்பி.க்கள் தொகுதி நிதியில் தண்ணீர் பிரச்னையை போக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஏற்கனவே, தண்ணீர் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த அரசு ஜல்சக்தி என்ற தனி அமைச்சகத்தையே அமைத்துள்ளது என்றார். இதைத்தொடர்ந்து தீர்மானத்தின் மீது காங்கிரஸ் கொண்டு வந்த 200 திருத்தங்கள் வாபஸ் பெறப்பட்டன. இடதுசாரிகள் கொண்டு வந்த திருத்தங்கள் தோல்வி அடைந்தன. குரல் வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.

நேரு-படேல் ஒப்பீடு

பிரதமர் மோடி பேசுகையில், ‘‘நாட்டின் முதல் பிரதமராக ஜவகர்லால் நேரு இல்லாமல் இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்னையே வந்திருக்காது என்று இன்றும் நாங்கள் நம்புகிறோம். சர்தார் படேல் முதல் பிரதமராகி இருந்தால் காஷ்மீர் கிராம மக்கள் இன்று பாதுகாப்பாக இருந்திருப்பார்கள். காங்கிரசின் முக்கிய தலைவராக படேல் இருந்தாலும், அவரை தேர்தல் சமயத்தில் குஜராத்தை தவிர நாட்டின் வேறெந்த இடத்திலும் தென்பட விடவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் குஜராத்தின் படேல் சிலையை பார்க்க காங்கிரஸ் தலைவர்கள் யாரும் ஒருமுறை கூட வருவதில்லை. ஒருமுறை குஜராத் வந்து பாருங்கள்,’’ என்றார்.

Related Stories: