கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்க மக்களவையில் தயாநிதி மாறன் எதிர்ப்பு: பாலைவன பகுதியில் அமைக்க வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘‘கூடங்குளத்தில் அணுக் கழிவு மையம் அமைக்கும் அரசின் அறிவிப்பால், மக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. இதை மக்கள் நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் அமைக்க சாத்தியம் உள்ளதா என ஆராய வேண்டும்,’’ என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் வலியுறுத்தினார். மக்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன், கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு மையம் பற்றிய பிரச்னையை கிளப்பினார். அப்போது அவர், ‘‘கூடங்குளம் அணு உலை நிலையத்திற்கே கடும் எதிர்ப்புகள் உள்ள நிலையில், அங்கு அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதாக ெவளியான அரசு அறிவிப்பு, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே, மக்களின் பயத்தை போக்கும் வகையில், மக்கள் நடமாட்டம் இல்லாத பாலைவன பகுதிகளில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்க சாத்தியக்கூறு உள்ளதா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ‘‘உலகம் முழுவதும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இந்தியாவிலும் பின்பற்றப்படுகிறது. கூடங்குளம் மட்டுமல்ல, நாட்டின் மற்ற அணு உலைகளிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. இது பாதுகாப்பானது தான்’’ என்றார். இதேபோல், மக்களவையில் பூஜ்ய நேரத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு பேசுகையில், ‘‘தமிழகத்தில் தண்ணீர் எமர்ஜென்சி ஏற்படும் அளவுக்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. அடுத்த சில நாட்களில் 21 நகரங்கள் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும் நிலையில் உள்ளன. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, தமிழகத்தில் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என வலியுறுத்தினார்.

அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் பேசுகையில், ‘‘தமிழகத்தில் தண்ணீர் பிரச்னையை போக்க, பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. இதுதொடர்பாக அரசின் திட்ட பட்டியல்களை தர தயாராக உள்ளேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பொய் தகவல் பரப்புகின்றனர்’’ என்றார். மாநிலங்களவை: நாட்டில் நிலவும் கடும் குடிநீர் பஞ்சம் குறித்து மாநிலங்களவையில் நேற்று குறுகிய விவாதம் நடந்தது. இதில், மார்க்சிஸ்ட் எம்பி டி.கே.ரங்கராஜன் பேசுகையில், ‘‘சென்னையில் ஒரு டேங்கர் குடிநீர் விலை, ஒரு கிராம் தங்கத்தை காட்டிலும் உயர்ந்துவிட்டது. தண்ணீரை காட்டிலும் தங்கம் விலை குறைவாக கிடைக்கிறது’’ என்றார்.  இந்திய கம்யூனிஸ்ட் எம்பி டி.ராஜா பேசுகையில், ‘‘முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் வறட்சியை தமிழ்நாடு சந்தித்து கொண்டிருக்கிறது’’ என்றார்.

Related Stories: