பசியை மறந்து 3 மணி நேரம் சபையை நடத்திய சபாநாயகர்: பிர்லாவுக்கு குவியும் பாராட்டு

புதுடெல்லி,: மக்களவையில் நேற்று சபாநாயகர் ஓம் பிர்லா தனது பசியை மறந்து 3 மணி நேரம் தொடர்ந்து அவையை நடத்தியதற்கு திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன. புதிதாக அமைக்கப்பட்ட 17வது மக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாஜ எம்பி ஓம் பிர்லா கடந்த 19ம் தேதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவை கூட்டத் தொடரின் 10ம் நாளான நேற்று,  கேள்வி நேரத்தின்போது அனைத்து உறுப்பினர்களும் தங்கள் தொகுதி பிரச்னைகள் குறித்து பேச சபாநாயகர் அனுமதி அளித்தார். திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராய் பேசுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அப்போது பேசிய சவுகதா ராய், ``சபாநாயகர் பசியை மறந்து மூன்று மணி நேரமாக அவையை தொடர்ந்து நடத்தி வருகிறார். வருங்கால தலைமுறையினருக்கு சபாநாயகர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்,’’ என்று பாராட்டினார். அவரைத் தொடர்ந்து பாஜ உறுப்பினர் கோபால் ஷெட்டி கூறுகையில், ``கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தியது பாராட்டுக்குரியது,’’ என்றார்.

அனைவருக்கும் போதிய நேரம் வழங்கும் நோக்கத்தில், நேரம் போனது தெரியாமல் அவையை 3 மணி நேரம் தொடர்ந்து நடத்திய சபாநாயகர், அதன் பின் மதியம் 2.30 மணியளவில் உணவு ஓய்விற்காக அவையை அரைமணி நேரம் ஒத்தி வைத்தார்.

Related Stories: